ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவுக்கு கிடைத்த பரிசு: பாலிவுட் நடிகை தியா மிர்சா
இந்தியர்களுக்கும் உலகுக்கும் கிடைத்த அரிய பரிசுதான் ஏ.ஆர். ரஹ்மான் என்று பாலிவுட் நடிகை தியா மிர்சா புகழாரம் சூட்டியுள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், லண்டனில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ’நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ், இந்தி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி லண்டன் தமிழர்களுக்காக நடத்தப்பட்டதால் அவர் தமிழில் பேசினார். தமிழ் பாடல்களையே அதிகம் பாடினார். இதனால் அதிருப்தி அடைந்த இந்தி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வருத்தத்தைப் பதிவு செய்தனர். இதுபற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தியா மிர்சா, இந்தியர்களுக்கும் உலகுக்கும் கிடைத்த அரிய பரிசுதான் ஏ.ஆர். ரஹ்மான். 25 ஆண்டுகளை இசை உலகில் நிறைவு செய்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் சாதனைகளை பிரமிக்கச் செய்வதாக தியா மிர்சா தெரிவி்த்தார். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளரின் இசை மிகவும் இனிமையானது என்றும் தியா மிர்சா தெரிவித்தார்.