13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இயக்குநராகும் சசிகுமார்? எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது?

சசிகுமார் மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இயக்குநராகும் சசிகுமார்? எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது?

சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை எடுத்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'நான் மிருகமாய் மாறினால்', 'அயோத்தி' உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இயக்குநர் சசிகுமார், நேரமின்மையால் படம் இயக்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கதாநாயகனாக சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, வெற்றிவேல், கிடாரி,நாடோடிகள் 2, உடன் பிறப்பே, அயோத்தி என பல படங்களில் கவனத்தை ஈர்த்தபோதும் மீண்டும் அவர் எப்போது படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அவர் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம், மண் சார்ந்த படைப்பியலில் அவர் உருவாக்கிய சுப்பிரமணியபுரம் திரைப்படம், இன்றளவும் தமிழ்சினிமாவின் முக்கிய படைப்பாக இருப்பதை சொல்லலாம்.

இந்நிலையில் ‘இயக்குநர் சசிகுமாரின்’ அடுத்த படைப்பு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருப்பது, அவரது ரசிகர்களையும் சினிமா ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரபூர்வமாக இன்னும் தகவல்கள் தெரியவரவில்லை. அனுராக் காஷ்யப் - சசிகுமாரின் இந்த படம், வரலாற்று படமாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அனுராக் கஷ்யாப், சுப்ரமணியபுரம் படத்தை பல மேடைகளில் பெரிதும் பாராட்டி வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com