”தண்டிக்கப்பட வேண்டியதுதான்”-’இறைவன் மிகப்பெரியன்’ தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து அமீர் அறிக்கை!

இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் ஜாபர் சாதிக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால் அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! என இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜாஃபர் சாதிக், அமீர்
ஜாஃபர் சாதிக், அமீர்pt web

கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூன்று ஆண்டுகளாக மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தநிலையில், குற்றச்சாட்டு எழுந்த உடனேயே ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டு இருந்தார்.

தயாரிப்பாளர் ஜாபர் சித்திக்
தயாரிப்பாளர் ஜாபர் சித்திக்

இதனிடையே குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’, அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இயக்குநர் அமீர் குறித்தும் சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில், இயக்குநர் அமீர் தெளிவான விளக்கங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் "இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அமீர்
இயக்குநர் அமீர் புதிய தலைமுறை

தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com