“ரகுவரன இனி ‘மாஸ்’ ஹீரோவா பாப்ப” - தெலுங்கில் அலப்பற கிளப்பும் ரகுவரன் பி.டெக் (VIP) ரீரிலீஸ்!

இது தமிழ் சினிமாவிற்கும் சரி அண்டை மாநிலங்களின் சினிமாவிற்கும் சரி இது ரீ ரிலீஸ் காலம் போல. அதிலும் தமிழில் பெரு வெற்றி பெற்று பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு வரவேற்பு மிக அதிகளவில் உள்ளது.
raghuvaran Btech
raghuvaran Btechpt web

தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி போன்றோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். பெரு வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் பாடல்களும் காதலர்களின் ப்ளேலிஸ்ட்டில் எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவை. அண்மையில் இத்திரைப்படம் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ரூ 30 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருந்தது என்றும் தகவல் வெளியானது.

அதேபோல் இப்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரகுவரன் பி.டெக் என்ற பெயரில் வெளியான வேலையில்லாப் பட்டதாரி திரைப்படமும் இன்று ரிரிலீஸ் ஆகியுள்ளது. தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், அமலாபால் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

ஒரு பக்கா கமர்ஷியல் படத்திற்கு உண்டான எல்லா அம்சங்களும் சரியான அளவில் இடம்பெற்ற திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி. ஒரு ஹீரோவுக்கே உண்டான மாஸான காட்சிகள், இளமை ததும்பும் காதல் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சியோடு முத்தாய்ப்பான அம்மா பாடல், கொஞ்சம் கூட திகட்டாத திரைக்கதை, இடையிடையே விவேக் காமெடி காட்சிகள், சமூக அக்கறை கொஞ்சம் இவையெல்லாம் சேர்ந்து தனுஷூக்கு ஒரு பம்பர் ஹிட் அடித்தது இந்தப் படம். குறிப்பாகவும் பொறியியல் படித்துவிட்டு பிடித்த வேலை கிடைக்காமல் வேறு ஏதேதோ தொழிலை பலரும் செய்து வருகிறார்கள். அப்படி ஏக்கத்தோடு இருக்கும் இளைஞர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்.

இந்நிலையில், தெலுங்கில் ரகுவரன் பி.டெக் ரீரிலீஸ் செய்ய அதையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். கடந்த சில தினங்களாகவே இந்தப் படத்திற்காக புக்கிங் ஜெட் வேகத்தில் சென்றது.

பொதுவாக திரைப்படங்கள் என்பது அதில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர்களைத் தாண்டி அனைவராலும் கொண்டாடப்பட்டால் மட்டுமே அது பெரு வெற்றிப்படமாக அமையும்.

இன்னொன்று அத்திரைப்படத்தின் கதையை தங்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொண்டு அதைக் கொண்டாடுவதும் அத்திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கும். வாரணம் ஆயிரம் இதில் முதல் வகை என்றால் ரகுவரன் பி.டெக் இதில் இரண்டாம் வகை.

கடந்த பிப்ரவரியில் சார் திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் நடித்த நடிகர் தனுஷ்க்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம். இதற்கு முன் அவர் நடித்து தெலுங்கில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்கள் வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி பெற்றவை. இந்நிலையில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51 ஆவது திரைப்படத்தில் மீண்டும் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ரகுவரன் பி.டெக் திரைப்படத்தின் கொண்டாட்டம் அவரது 51 ஆவது திரைப்படத்தின் மார்க்கெட்டை உயர்த்திப் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com