ஹீரோவாக அறிமுகமாகும் DSP! | Devi Sri Prasad | Yellamma
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கு மொழிகளில் பலப்பல ஹிட் படங்களை கொடுத்தவர். சமீபத்தில் வந்த `புஷ்பா 2' வரை அவர் இசையமைத்த பல படங்களின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை இசையால் நம்மைக் கவர்ந்த தேவி, அவ்வப்போது சில பாடல்களின் வீடியோவில் தலை காட்டுவார். இப்போது தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். தெலுங்கு நடிகரான வேணு எல்டாண்டி இயக்குநராக `பலகம்' படம் மூலம் அறிமுகமாகி, பெரிய அளவில் வரவேற்பும் பெற்றார். இவர் அடுத்து இயக்கும் `எல்லம்மா' படத்தில்தான் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகிறார். தற்போது படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகியுள்ளது.
முதல் படத்தில் நடிப்பது பற்றி பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். அப்பதிவில், "அன்று, தேவி (அவர் இசையமைத்த முதல் படத்தின் பெயர்) தெய்வத்தின் ஆசீர்வாதத்துடன் எனது இசை அறிமுகம் துவங்கியது, மேலும் எனக்கு அனைவரது இதயங்களிலும் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. உங்கள் குடும்பத்தில் என்னையும் ஒருவராக ஆக்கியது. நீங்கள் எப்போதும் என் மேல் மழைபோல பொழியும் அன்புக்கு, எப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
இன்று, மீண்டும் ’எல்லம்மா’ (அவர் நடிகராக அறிமுகமாகும் பட பெயர்) தெய்வத்தின் ஆசீர்வாதத்துடன், ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் மனதுக்கு இன்னும் நெருக்கமாக, ஒரு தெய்வீக வாய்ப்பு. எனது ஒவ்வொரு அடியிலும் எல்லோரும் இன்னும் அதிக அன்பும் ஆசீர்வாதமும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
’எல்லம்மா’, எனது அறிமுக படம். என் மீது அதீத நம்பிக்கை வைத்ததற்கு, என்னை நடிக்க சம்மதிக்க வைத்ததற்கு தயாரிப்பாளர் திலராஜு மற்றும் இயக்குநர் வேணு எல்டாண்டிக்கு மனப்பூர்வமான நன்றி. இது மிகவும் உற்சாகமான ஒன்றாக இருக்கப் போகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

