"அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல..." ஆஸ்கர் விருது குறித்து ஏ ஆர் ரஹ்மான் | A R Rahman | Oscar
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இயங்கிவரும் இவரது திரைப்பயணம் பற்றிய பேட்டி ஒன்றை அளித்தார். அதில் `Chhaava' படத்துக்கு இசையமைத்தது, `Slumdog Millionaire' படத்துக்கு ஆஸ்கர் ஏன் கிடைத்தது உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
`Chhaava' படம் பிரிவினைவாதம் பேசும் படமாக இருந்ததே எனக் கேட்கப்பட "இன்றைய காலகட்டத்தில் படங்கள் என்ன நோக்கத்தில் எடுக்கப்படுகிறது எனக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில படங்கள் தீய நோக்கங்களுக்காக எடுக்கப்படுகின்றன. அப்படியான படங்களை நான் தவிர்க்கப்பார்க்கிறேன். அது (Chhaava) கூட பிரிவினையை பேசும் படம் தான். அது பிரிவினையை காட்டி பணம் சம்பாதித்தது, ஆனால் அதன் மையக்கரு துணிச்சலைக் காட்டுவது என்று நான் நினைக்கிறேன். நான் இயக்குநரிடம், 'இதற்கு நான் ஏன்?' என்று கேட்டேன். இதற்கு நீங்கள் மட்டுமே தேவை என்று அவர் கூறினார். ஆனால் மக்கள் அதை விட புத்திசாலிகள் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். திரைப்படங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளது, அது உண்மை என்ன, எது திரிபு என்ன என்பதை அறிந்திருக்கிறது" என்றார்.
"Slumdog Millionaire படத்திற்காக பலரும் உங்களை புகழ்ந்திருப்பார்கள், விருதுகள் அளிதார்கள், என்னை பொறுத்தவரை, Slumdog Millionaire உங்களின் Best Work இல்லை" என்று நெறியாளர் சொல்ல அதற்கு பதில் அளித்த ரஹ்மான், "இல்லை, அங்குதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். அந்தப் படத்திற்கு வாக்களித்த ஹாலிவுட் இசை வல்லுநர்கள் அனைவரும், அப்படத்தில் நான் கொண்டு வந்த Soundscape ஹாலிவுட் இசையை பொறுத்தவரை மிகப் புதிய ஒன்று என உணர்ந்தனர். அப்படியான ஒன்று ஹாலிவுட்டில் அதற்கு முன்பு இல்லை. அந்த இசையை அங்கு இடம்பெற வைத்தது அபூர்வமான ஒன்று. வாக்களித்தவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. ஹாலிவுட் எப்போதும் ஒரு ஃபார்முலாவை கொண்டு இயங்குவது. ஆனால் Slumdog Millionaire இசையை நீங்கள் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. அதற்கு என ஒரு கதாபாத்திர தன்மை இருக்கிறது. நம் கலையை நாம் மதிப்பிடுவதற்கும், அவர்கள் மதிப்பிடுவதற்கு வேறுபாடு உண்டு. அவர்களின் கவனம் உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதில் இருக்கும். நாம் பாரம்பரியத்தையும், மெல்லிசையையும் கவனத்தில் கொள்வோம்" என்றார்.
AI பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கப்படுவது பற்றி கேட்கப்பட "என் குரலில் கூட பாடல்களை உருவாக்குகிறார்கள். அந்த உண்மையை ஏற்க வேண்டும். ஆனால் நரேந்திர மோடி அவர்களின் குரலில் முக்காபுல்லா பாடலை பாட வைப்பது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களும் நடக்கிறது. அவரின் தனித்துவமான குரல் நேர்த்தியான ஒரு பாடலில் ஒலிப்பது நன்றாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அவர் குரலில் வந்த பாடல்களுக்கு என ஒரு ப்ளேலிஸ்ட் வைத்திருக்கிறோம். அது ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கிறது" என்றார்.

