எம்.ஜி.ஆர் பாணியில் சாட்டை... கூடவே, ‘நான் ஆணையிட்டால்’... ‘ஜன நாயகன்’ விஜய் சொல்லும் சேதி என்ன?
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கடைசி பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு வைக்கப்பட்ட பெயரும் சரி.. வெளியான போஸ்டர்களும் சரி, சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இதில், இரண்டாவதாக வெளியான போஸ்டரில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பாணியில் விஜய் சாட்டையை சுழற்றுவதும், ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் வரியும் இடம்பெற்றுள்ளன. ஆக, கடைசி படத்தில் விஜய் சொல்ல வருவது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மிளிரும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கட்சி தொடங்கினார். தமிழ் சினிமா வரலாற்றிலும் சரி.. தமிழக அரசியல் வரலாற்றிலும் சரி.. விஜய் தனக்கு முன்னோடியாக பார்ப்பது எம்ஜிஆரைத்தான். ஆம், இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். என்னதான் தனது சீனியர் நடிகரான ரஜினிகாந்த்தை சில படங்களில் சிலாகித்து பேசினாலும், வழிகாட்டியாக காட்டிக்கொண்டது எம்ஜிஆரைத்தான்.
வசீகரா படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக விஜய் நடித்திருப்பார். அதேபோல், விஜய்யை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்ற மெர்சல் படத்தில், எம்ஜிஆர் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில், அவருக்கு முன்னால் எண்ட்ரி கொடுத்து வில்லன்களை அதகளம் செய்யும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
படங்களில் மட்டுமல்லாது, படத்தின் இசைவெளியீட்டு விழா மேடைகளிலும் எம்.ஜி.ஆரை பலமுறை சிலாகித்து பேசியுள்ளார் விஜய். சர்கார் பட இசைவெளியீட்டுவிழாவில் பேசியபோது, எதிரியா இருந்தாலும் மதிக்கும் பண்பு என்று, கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த மரியாதையை குறிப்பிட்டு பேசி இருப்பார்.
லியோ பட வெற்றி விழாவில் பேசியபோது, “எம்ஜிஆரின் காலத்தில், யாருக்கு உதவி கிடைத்தாலும் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்வார்கள். அந்த அளவுக்கு உதவிகளை எம்ஜிஆர் செய்துள்ளார். அதே போல் எனக்கும் ஒரு ஆசை. எதிர்காலத்தில் எங்கு நல்ல விஷயம் நடந்தாலும், அது நம்ம பசங்களாதான் செஞ்சதா இருக்கணும்.. அப்படி ஒரு பெயர் எடுக்கணும்” என்று தனது விருப்பத்தை கூறினார் விஜய். அப்போது, 2026ம் ஆண்டு குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்க, ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று தனது பட வசனத்தோடு ஒப்பிட்டு அரசியல் வருகையை மறைமுகமாக குறிப்பிட்டார்.
தமிழ் சினிமாவில், திரைத்துறையில் இருந்து அரசியல் கட்சி துவங்கி, அதில் வெற்றிகரமாக வீருநடை போட்ட முதல் நபர் என்றால் அது எம்ஜிஆர்-தான். 1977ம் ஆண்டு அவர் ஆட்சியைப் பிடித்தபிறகு, அவரது இறப்பு வரையிலும் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருந்தது திமுக.
துவக்கத்தில், காங்கிரஸ், பிறகு திமுக என்று இருகட்சிகளில் பயணித்த எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு வெளியேற்றப்பட்டபோது கட்சி துவங்கி, 4 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார். அவரது பாதையில் ஜெயலலிதா ஆட்சியை பிடித்தாலும், அடித்தளம் போட்டவர் எம்ஜிஆர்தான். அந்த வரிசையில் முயன்று பார்த்த விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை தொட்டுப்பார்த்தார். பிறகு கட்சி தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், யாரை எதிர்த்தாரோ, அவர்களுடனேயே நட்பு பாராட்டுகிறார்.
இப்படியான சூழலில்தான், இந்த தலைமுறையின் ட்ரெண்ட் செட்டர் நடிகராக மிளிரும் விஜய், அரசியல் களத்தில் குதித்து ஆழம் பார்க்க முயன்று வருகிறார்.
அதன்படி, அவர் வைக்கும் இலக்கு, 2026 சட்டமன்ற தேர்தல். 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பில் அறிமுகமாகி, 2025 வரையிலும் 69 படங்களில் நடித்துள்ள விஜய், கடந்த 15 ஆண்டுகால பயணத்தில் பல இடங்களில் அரசியல் பேசியுள்ளார். அது படத்திலாகட்டும், படத்தின் இசை வெளியீட்டு விழாவாகட்டும். தலைவா.. time to lead-ல் துவங்கி, சர்கார் வரை பல படங்களில் அரசியல் பேசியதால், பல சிக்கல்களையும் எதிர் கொண்டிருக்கிறார் விஜய்.
கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடந்து முடிந்த மாநாட்டிலும், ‘கூத்தாடி’ என்று தன்னை நோக்கி வரும் விமர்சனத்திற்கு உருக்கமாக பதிலடி கொடுத்த விஜய், “எம்.ஜி.ஆரையும், என்.டி.ஆர்.-ஐயும் கூத்தாடி என்றுதான் கூப்பாடு போட்டார்கள். ஆனால், அவர்கள்தான் கடைசி வரை மக்களின் மனங்களை வென்ற மகத்தான தலைவர்களாக இருக்கின்றனர்” என்று சிலாகித்தார். சமீபத்தில் வந்த எம்ஜிஆரின் பிறந்தநாளில் கூட, அவரை சிலாகித்து பிறந்தநாள் வணக்கம் என்று எழுதியிருந்தார் விஜய்.
இத்தனை தூரம் எம்ஜிஆரை தனது முன்னோடியாக பார்த்துவரும் விஜய், அவரது பாணியிலேயே அரசியலில் கோலோச்சவும் முயன்று வருகிறார். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று இருந்தால் சரி வராது என்று நினைத்து, திரைத்துறைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தவர், ஏற்கனவே ஒப்புக்கொண்ட கடைசி படத்தில் நடித்து வருகிறார். இப்படம், வரும் தீபாவளி அல்லது 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.
நடிகராக இருந்தபோதே விஜய்யின் படத்தில் அரசியல் நெடி தெரியும். அரசியல் கட்சி துவங்கிவிட்டபிறகு இல்லாமலா இருக்கும். ஆம், கடைசி படத்திற்கு ஜனநாயகன் என்று தலைப்பு வைத்துள்ளனர். மாஸ்டர் படத்தில் நெய்வேலியில் மக்கள் ஆதரவோடு எடுத்த செல்ஃபியை ரீ கிரியேட் செய்து, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து வெளியான செகண்ட் லுக்கில், எம்ஜிஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால் பாடல்’ வரி இடம்பெற்றுள்ளது. அதில் எம்ஜிஆர் பாணியில் விஜய் சாட்டையை சுழற்றுகிறார்.
ஆக, கொள்கை எதிரி, அரசியல் எதிரி என்று தனது எதிரிகளை ஏற்கனவே கைகாட்டிவிட்ட விஜய், ‘நான் ஆணையிட்டால்’ என்று குறிப்பிடும் வகையில் கடைசி படத்தை அரசியல் படமாக தேர்வு செய்து நடித்து வருவதாகவே தெரிகிறது.
தற்போது இந்த இரண்டு போஸ்டர்களும் சோசியல் மீடியாவை அதிரவைத்துள்ளன. எம்ஜிஆரைப் போல விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா என்று இப்போது சொல்ல முடியாது. ஆனால், படத்தில் அரசியல் தூக்கலாகவே இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.