நடிகர் விஷ்ணுவர்தன் நினைவிடம் அமைக்க காலம் தாழ்த்துவதா? கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் அதிருப்தி

நடிகர் விஷ்ணுவர்தன் நினைவிடம் அமைக்க காலம் தாழ்த்துவதா? கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் அதிருப்தி
நடிகர் விஷ்ணுவர்தன் நினைவிடம் அமைக்க காலம் தாழ்த்துவதா? கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் அதிருப்தி

நடிகர் விஷ்ணுவர்தனுக்கு விரைவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் கடந்த 24 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் உடல் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் தகனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், அங்கேயே நடிகர் அம்பரீசுக்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே இடத்தில் நடிகர் ராஜ்குமார் நினைவிடமும் அமைந்துள்ளது. 

(அம்பரீஷ்)

இந்த நிலையில், நடிகர் விஷ்ணுவர்தன் மரணம் அடைந்து 9 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவருக்கு நினைவிடம் அமைக்கவில்லை. பல்வேறு காரணங்களினால் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைப்பது தாமதமாகி வருகிறது. அம்பரீசுக்கு நினைவிடம் அமைக்கும்போதே, விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

(ராஜ்குமார்)

இதுபற்றி விஷ்ணுவர்தனின் மனைவி பாரதி கூறும்போது, ’’என் கணவர் மரணம் அடைந்து 9 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு நினைவிடம் அமைக்க கர்நாடக அரசு முன்வரவில்லை. அபிமான் ஸ்டூடியோவில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த இடம் வழக்கில் சிக்கியதால், முந்தைய அரசு, விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க மைசூருவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இந்த நிலமும் பிரச்சினையில் உள்ளது. விஷ்ணுவர்தனுக்கான நினைவிடத்தை மைசூருவில்தான் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக 9 ஆண்டுகள் அலைந்தும் எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை’’ என்றார்.

விஷ்ணுவர்தனின் மருமகனும், நடிகருமான அனிருத்தும் கர்நாடக அரசு மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவர் கூறும்போது, ‘அனைத்து அரசிடமும் அதிகாரிகளிடம் இதுபற்றி நான் பேசிவிட்டேன். ஆனால், எங்கள் உணர்வுகளுடன் ஒன்பது வருடங்களாக அரசு விளையாடி வருகிறது. முதலமைச்சர் குமாரசாமி மீது நான் குற்றச்சாட்டை வைக்கவில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்றுதான் கோருகிறேன்’ என்றார். 

பாஜக தலைவர் எடியூரப்பா இதுபற்றி கூறும்போது, ‘கர்நாடக மக்கள் மதிக்கும் மூன்று கன்னட அடையாளங்களான ராஜ்குமார், அம்பரீஷ், விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு அருகருகே நினைவிடம் அமைப்பதுதான் சரியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com