\
vijay - bharathiraja
vijay - bharathirajaweb

மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி.. நடிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்!

இயக்குநர் இமயம் என்ற போற்றப்பட்ட பாரதிராஜா தன்னுடைய 84வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார், அவருடைய மறைவுக்கு திரையுலகினர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Published on
Summary

தமிழ் சினிமாவின் கிராமிய வாழ்வியலை உலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா 84வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், விஷால், ஜிவி பிரகாஷ், சிபி சத்யராஜ் போன்ற திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று தன்னுடைய 84வது வயதில் காலமானார்.

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜாweb

அவருடைய மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் உடலுக்கு அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் விஜய் அஞ்சலி
முதல்வர் விஜய் அஞ்சலி

இரங்கல் தெரிவித்த திரையுலகினர்..

முதல்வர் விஜய்

தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம்  திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும்  அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

முக ஸ்டாலின்

தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி

தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.

பாரிவேந்தர்

தமிழ்த் திரைப்பட உலகின் தலைசிறந்த படைப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். கிராமிய வாழ்வியலையும், தமிழர் பண்பாட்டையும், மனித உணர்வுகளையும் திரையில் இயல்பாகப் பதிவு செய்து, தமிழ் சினிமாவிற்கு புதிய அடையாளத்தை உருவாக்கியவர் பாரதிராஜா. எண்ணற்ற திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி, தலைமுறைகள் தாண்டி தமிழ் திரைப்பட உலகை வளப்படுத்திய அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

விஷால்

நமது புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்து சென்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தமிழ் சினிமாவின் போக்கையே என்றென்றைக்குமாக மாற்றியமைத்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவரான அவர், வேறு யாராலும் முடியாத அளவிற்கு நமது கிராமங்களின் ஆன்மாவையும், நமது மக்களையும், நமது உணர்வுகளையும் வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்தார்.

ஜிவி பிரகாஷ்

பாரதிராஜா சார் 💔. இதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் 💔. சினிமாவை மாற்றியமைத்த மற்றும் பல திரைப்படப் படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளித்த ஒரு மாபெரும் ஆளுமை.

சிபி சத்யராஜ்

#பாரதிராஜா சார் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். ஐயா, உங்கள் திரைப்படங்கள் திரைப்பட உருவாக்கக் கலைக்கான ஒரு சிறந்த பாடப்புத்தகமாகத் திகழ்ந்தன. கிராமப்புறத் தமிழகத்தின் ஆன்மாவைத் திரையில் கொண்டு வந்த நீங்கள், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தீர்கள். திரைத்துறைக்கு இது ஒரு பேரிழப்பு. அமைதியில் துயில்கொள்ளுங்கள் ஐயா. 🙏🏻

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com