தேவா மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு! - முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களின் முன்னோடியுமான தேவா, 76-வது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும் என முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 76. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியிருக்கும் தேவா, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்
ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கிய அவர், விஜய், அஜித் ஆகியோரின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கியத் தூணாக விளங்கியவர்.
திரைப்பட டைட்டில் கார்டில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ பெயர் தாங்கி வரும் BGM-ஐ இசையமைத்தவர் தேவாதான். இன்றுவரை அந்த BGM–க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கானா பாடல்களுக்கு இணையாக மெல்லிசை பாடல்களுக்கும் புகழ்பெற்றவர் தேவா.
1990இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதை பெற்ற அவர், 1992 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். அதேபோல 1995 இல் ஆசை திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில திரைப்பட விருதை பெற்றுத்தந்தது.
இந்தசூழலில் தேவாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் விஜய், “தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

