மலையாள சினிமாவின் மற்றுமொரு மகுடம்...! - சோலா - 2019.

மலையாள சினிமாவின் மற்றுமொரு மகுடம்...! - சோலா - 2019.

மலையாள சினிமாவின் மற்றுமொரு மகுடம்...! - சோலா - 2019.
Published on

“சொந்த கிராமத்தைவிட்டு காதலனுடன் நகரத்திற்கு பயணித்த பெண்ணை, காதலனின் முதலாளி பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்.” இந்த ஒரு வரிக் கதையினை பார்வையாளனுக்கு இலக்கியத் தரத்துடனும் தத்துவார்த்த கேள்விகளை எழுப்பி விவாதிக்கும் படியும் உருவாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் சனல் குமார் சசிதரன். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இந்த மலையாள திரைப்படத்தின் பெயர் ‘சோலா’.

பள்ளி மாணவியான ஜானு இயற்கையின் கரங்கள் இறுகப் பற்றியிருக்கும் ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கிறாள். ஜானுவும் அவளது காதலனும் ஒரு நாள் நகரத்திற்கு வந்து அந்த நாளை கொண்டாட நினைக்கிறார்கள். ஆனால் காதலனின் முதலாளி அப்பெண்ணுடன், பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார். அதுவரை சராசரிக் கதையாக நகர்ந்த சோலா இதன் பிறகு தத்துவார்த்த ரீதியாக பயணிக்கிறது. தன்னைக் காப்பாற்ற முடியாத காதலனை மெல்ல கைவிட்டு முதலாளியுடன் விரும்பியும் விரும்பாமலும் மீண்டும் உறவு கொள்ளும் அப்பெண் கதாபாத்திரம், காதலுக்கும் காமத்திற்கும் இடையிலான பரிதவிப்புடன் நகர்த்தப்படுகிறது.

படத்தின் துவக்கதில் ஒலிக்கும் ஒரு வசீகர குரலானது, யுத்தமும் ரத்தமும் என்றால் பயப்படும் ஒரு ராஜகுமாரனின் கதையினை சொல்கிறது. அந்த ராஜகுமாரன் தான் ஜானுவின் காதலன். இறுதியில் கற்பு என்றால் என்ன என இயக்குநர் தன்னிலை விளக்கம் தர முயல்கிறார். அந்த கன்னிப் பெண் கேட்ட கேள்வியின் பாரம் தாங்காமல் ஆகாயம் அதிர்ந்ததாகச் சொல்கிறார். உண்மையில் இப்படம் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

இந்திய சினிமாவில் இப்படியான கதை சொல்லல் பாணி அரிது. குறிப்பாக த்ரில்லர் வகைமை கதைகளை தத்துவார்த்த ரீதியாகவும் அணுக முடியும் என்பதை சோலா நிரூபித்திருக்கிறது. உலகப் புகழ் பெற்ற தென்கொரிய இயக்குநரான கிம் கி டுக்’ன் இயக்கத்தில் 2003-ல் வெளியான சினிமா ‘Spring, Summer, Fall, Winter...and Spring’. சர்வதேச அளவில் கிம்மின் புகழை மேலும் அதிகரித்தது இப்படம். இப்படத்தில் குறியீடுகள் கொண்டு இயற்கை, மனிதர்கள், பாவ புண்ணியங்கள் என தன்னுலகின் அனைத்தையும் கிம் கையாள முயன்றிருப்பார். சோலா திரைப்படமும் கிம் படத்தினச்சு பாணியை கையாள முயன்றிருக்கிறது.

பெரு வனத்திற்குள் ஜானு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் காட்சியாகட்டும், தன் காதலனின் முதலாளி இறந்த பிறகு கதறி அழுவதாகட்டும், நீங்கள் இதுவரை காணாத விசித்திர மனித மனதின் வெளிப்பாடுகளை திரையில் காட்டி உங்கள் மனதில் பாரத்தை ஏற்றி விடுகிறார் இயக்குநர். இப்படத்தின் ஒளிப்பதிவு கொஞ்சம் சொதப்பி இருந்தாலும்கூட, மேலே சொன்ன எதுவும் உங்களுக்குப் புரியாமல் போயிருக்கும்; அல்லது இக்கதையின் தீவிரத்தை உங்களால் உள்வாங்க முடியாமல் போயிருக்கும்.

இப்படத்தில் இயக்குநருக்கு இணையான பணி ஒளிப்பதிவாளருடையது. இன்னும் சரியாக சொல்லப் போனால் இது ஒளிப்பதிவாளரின் சினிமா என்றே கூற வேண்டும். சோலா - இத்திரைப்படத்தின் வசனங்களை அதிகபட்சமாக ஒரு A4 காகிதத்தில் எழுதிவிட முடியும். அதனை காட்சி மொழியில் ஒளிப்பதிவின் மூலம் முழுமையான சினிமாவாக மக்களுக்கு தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜித் ஆச்சார்யா. இசையமைப்பாளர் பசில் சி.ஜே’வின் இசை அதிர்வுகளை பார்வையாளனுக்கு துல்லிய அலைவரிசையில் கடத்துகிறது. ஜானுவாக நடித்திருக்கும் நிமிஷாவின் நடிப்பும் ஜானுவை கொடுமை செய்யும் முதலாளியாக வரும் ஜோஜு ஜார்ஜின் நடிப்பும் இப் படத்தின் உயிர்நாடி. ஜோஜு இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. இவ்விருவரும் சோலா திரைப்படத்திற்காக கேரள மாநில அரசின் விருதுகளைப் பெற்றனர். இந்தியாவில் திரையிடப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  

“நூறு கோடி பட்ஜெட், நாலு பாட்டு இருந்தா ஆடியோ ரைட்ஸ் விக்கலாம், இந்த நடிகர் இருந்தா அவரோட ரசிகர்கள் கூட்டம் வரும், யூ சான்றிதழ் கிடச்சா சாட்டிலைட்ல படத்த விக்கலாம்.” என தமிழ் சினிமா ஒரே இடத்தில் ரொம்ப காலமாக எட்டு போட்டுக் கொண்டிருக்கிறது. நமக்கு அருகில் இருக்கும் மலையாள சினிமாவோ எட்டுத் திசையிலும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சோலா தனித்துவமான நல்ல முயற்சி. இப்போது அமேசான் பிரைமிலும் இதனைக் காண முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com