மின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்
தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் தெளிவின்மை தென்படுகிறது என நடிகரும் இயக்குநருமான சேரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற அனைத்துச் சேவைகளும் முடக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். இதனால் அவர்களின் பெருவாரியான நேரமானது வீட்டிலேயே கழிந்து வருகிறது. இதன் காரணமாக அவர்களின் மின்சார பயன்பாடும் முன்பை விட அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் ஊரடங்கு காலத்தில் தங்களது வீடுகளுக்கு மின்வாரியம் அதிக அளவு மின்கட்டணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஊரடங்கு காரணமாக மக்கள் 18-20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் பழைய முறையிலேயே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த யூனிட் அளவின் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் தெளிவின்மை தென்படுகிறது என நடிகரும் இயக்குநருமான சேரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. ( கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.