முதல் பாகத்தின் சாதனையை முறியடிக்குமா ஜெயிலர் 2 ? திரையுலகின் கவனம் ஈர்த்த முன்பதிவு!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், முன்பதிவில் உலகளவில் ரூ.11 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. முதல் பாகத்தின் சாதனையை முறியடிக்கும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம், திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ‘ஜெயிலர் 2’. இன்னும் 6 நாட்களில் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிக்கெட்க்கு பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் பல இடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முன்பதிவில் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த், இந்தப் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் திரும்பியிருக்கிறார்.
இப்போதைய நிலவரப்படி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முன்பதிவு மூலம் மட்டும் உலக அளவில் ரூ.11 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அமெரிக்கா மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், படம் வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபீஸில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முழுமையான முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை முதல் துவங்கும் என சொல்லப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’, முதல் பாகத்தின் வசூலான 600 கோடி சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

