"வேற லெவல்ப்பா..” ரிலீஸான 'பன் பட்டர் ஜாம்' படத்தின் ஸ்னீக் பீக்... ராஜூவை பாராட்டிய விஜய்!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் முதன் முதலாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ராஜூ. தொடர்ந்து, ‘ஆண்டாள் அழகர்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற சீரியல்களில் நடித்தார். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்கிற சீரியலில் கத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்தநிலையில், இதை பயன்படுத்தி அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட இவர், சீசன் 5 பட்டத்தை வென்றார் .
இந்தநிலையில், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில், முதல்முறையாக நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுத, ஆத்யா பிரசாத், சரண்யா பொன்வன்னன், சார்லி , தேவதர்ஷினி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ரெயின் ஆஃப் ஏரோஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான பன் பட்டர் ஜாம் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பன் பட்டர் ஜாம் படத்தின் 4.18 நிமிடங்கள் கொண்ட ஸ்னீக் பீக் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், இந்த வீடியோவை பார்த்துவிட்டு நடிகர் விஜய் வாழ்த்தியதாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இப்படத்தின் நாயகன் ராஜு.
இதுகுறித்து ராஜூ வெளியிட்ட பதிவில், "அன்புக்குரிய தளபதி விஜய் அண்ணாவிடம் இருந்து கால் வந்தது. "வேற லெவல்ப்பா... உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும் எனத் தோன்றியது" என்றார். வேறு என்ன வேண்டும் எனக்கு? நான் இன்று தளபதியை சிரிக்க வைத்திருக்கிறேன். இது எனக்கு மிகப் பெரிய விஷயம்.... நன்றி தலைவா!" என ட்வீட் செய்துள்ளார்.
"என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்க வேண்டிய நாள்!" என இன்ஸ்டாவில் நெகிழ்ந்துள்ளார் ராஜு.