சல்மான் கானை இயக்கும் விஜய் பட இயக்குநர்! | Salman Khan | Vamshi Paidipally
பாலிவுட்டில் முன்னணி நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் தற்போது அபூர்வா லாக்கியா இயக்கி வரும் `Maatrubhumi: May War Rest in Peace' படம் தயாராகி வருகிறது. இதனையடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் பிரபாஸ் நடித்த `முன்னா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வம்சி பைடிபள்ளி. இதனையடுத்து ஜூனியர் என் டி ஆர் நடித்த `பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த `யவடு' மகேஷ்பாபு நடித்த `மஹரிஷி' போன்ற படங்களை இயக்கினார். தமிழில் கார்த்தி நடிப்பில் தமிழ் தெலுங்கு பைலிங்குவல் படமாக உருவான `தோழா/ஊப்பிரி' படத்தை இயக்கினார். மேலும் விஜய் நடித்த `வாரிசு' படத்தையும் இயக்கினார்.
இப்போது தெலுங்கு, தமிழ் தாண்டி பாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார் வம்சி பைடிபள்ளி. சல்மான்கான் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் இப்படம் உருவாகிறது என்பதையும், படம் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாகும் என்பதையும் தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார் சல்மான்.
தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளும், மும்பையில் உள்ள SRPF Groundல் பெரிய நகரம் ஒன்றை செட் ஆக உருவாக்கும் பணிகளும் துவங்கி உள்ளதாம். ஏப்ரல் 14 முதல் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் எனவும் தகவல் உலவுகிறது.

