இனி ஆக்சன் படங்களுக்கு ப்ரேக்... ரொமான்ஸ் கதைகள் கேட்கும் ஷாருக்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கிங் படத்தின் படப்பிடிப்பின் போது காயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து திரும்பிய அவர், இனி ஆக்ஷன் படங்களில் இருந்து விலகி, காதல் கதைகளில் நடிக்க முடிவு செய்துள்ளார். ஃபராகானை தொடர்பு கொண்டு காதல் கதைகளை கேட்டு வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிவரும் `கிங்' படம் உருவாகி வருகிறது. இந்தப் படப்பிடிப்பின் போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் `கிங்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஷாருக் சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டாலும், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் கதாபாத்திரங்களில் இருந்து விலகி இருக்க ஷாருக்கான் முடிவு செய்து உள்ளார். எனவே இனி அடுத்து நடிக்கும் படங்களில் மீண்டும் ரொமான்ஸ் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக Pathaan, Jawan என ஆக்ஷன் படங்களில் நடித்து வந்தார். அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றன. இப்போது நடித்து வரும் கிங் படத்திலும் முழுக்க ஆக்ஷன் நிறைந்த களம்.
இனி ஆக்ஷனிலிருந்து பிரேக் எடுக்க முடிவெடுத்திருப்பவர், அடுத்து காதல் கதைகளை கேட்டு வருகிறாராம். அதன்படி ஃபராகானை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் ஷாருக். ஏற்கெனவே ஒரு நிகழ்வில் மீண்டும் படங்களை இயக்க வந்தால் ஷாருக்கானை வைத்து இயக்குவேன் எனப் பேசியது குறிப்பிடத்தக்கது. அது ஒரு முதிர்ச்சியான காதலை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு ஒரு இயக்குநரும் ஷாருக்கானிடம் காதல் கதை ஒன்றை சொல்லி இருக்கிறாராம். அதில் பள்ளி கால நினைவுகள், காதல் என இருக்கிறதாம். இது ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம்.
ஃபராகானின் படம் மற்றும் புதிதாக வந்துள்ள இந்தக் காதல் கதை ஆகிய இரண்டு கதைகள் குறித்தும் ஷாருக்கான் ஆலோசித்து வருகிறாராம். இது தவிர சில இயக்குனர்களையும் அழைத்து அக்கதைகள் குறித்து பேசி வருகிறார். இரண்டு கதைகளையும் ஆய்வு செய்த பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு இறுதி முடிவு எடுப்பார் என்று ஷாருக்கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'கிங்' (King) படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் பிறகு, அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.

