Love & War புது ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Sanjay Leela Bhansali | Ranbir | Alia | Vicky
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் படம் `லவ் & வார்'. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு தள்ளிப்போகும் நிலையில் இப்போது புதிய ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இராணுவ வீரர்களைப் பற்றிய கதைதான் இப்படம் எனச் சொல்லப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இப்படம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. முதலில் 2025ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டது `லவ் & வார்'. பின்னர் 2026 மார்ச் 20, ஏப்ரல் 14, ஆகஸ்ட் 14 என தள்ளிப் போன இந்தப் படத்தின் புது ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு குடியரசு தின வார இறுதியில், அதாவது 2027 ஜனவரி 21 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலியின் படம் என்றாலே மிக பிரம்மாண்டமாக உருவாகும் என்பது தெரிந்ததே. ஆனால் இப்படத்தின் தாமதத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கதையில் செய்யப்பட மாற்றங்கள், சஞ்சய் லீலா பன்சாலி ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பார்க்கும் நேர்த்தி மற்றும் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோரின் தேதிகள் ஒத்துவராதது என பல விஷயங்கள் சொல்லப்படுகிறது.
ஆனால் இப்போது 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது எனவும், மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பு இன்னும் இரு மாதங்களில் நிறைவடையும் எனவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் ரன்பீருடன் சாவரியா (2007) ஆலியாவுடன் ’கங்குபாய் கத்தியாவாடி’ (2022) படத்துக்கு பிறகு மீண்டும் பன்சாலி இணையும் படம் இது.

