`Dhurandhar'க்கு நேற்று விமர்சனம், இன்று பாராட்டு... சர்ச்சையான ஹ்ரித்திக் பதிவு | Hrithik Roshan
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கி கடந்த வாரம் வெளியான படம் `துரந்தர்'. நிஜத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை மையமாக வைத்து கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ள ஸ்பை த்ரில்லராக உருவானது இந்தப் படம். வெளியான நாளில் இருந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. 7 நாட்களில் இந்திய அளவில் 180 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது படம். ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்தை திரைபிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தனர். அதே நேரம் முன்பு நிகழ்ந்த தாக்குதல்களை காட்டி, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை தக்க வைக்கும் வேலையை `துரந்தர்' போன்ற படங்கள் செய்கின்றன என்ற கருத்துகளும் வந்தன.
இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நேற்று தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் `துரந்தர்' படத்தின் அரசியலில் தனக்கு உடன்பாடில்லை என விமர்சித்து ஒரு ஸ்டோரியை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் "எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும், ஒரு சூழலில் ஏறி, கதையை கட்டுக்குள் கொண்டு வந்து, சுழற்றி, அவர்கள் சொல்ல விரும்புவது அந்தத் திரையில் வெளிப்படும் வரை அசைத்து கதை சொல்பவர்களை நான் அன்பு செய்கிறேன். துரந்தர் அதற்கு ஒரு உதாரணம். அதன் கதைசொல்லல் எனக்கு பிடித்திருந்தது. அது சினிமா.
நான் அதன் அரசியலை ஏற்காமல் இருக்கலாம், ஒரு திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாது, நாம் ஒரு குடிமக்களாகவும் பொறுப்புடன் செயல்படுவது பற்றி வாதிடலாம். ஆனாலும், ஒரு சினிமா மாணவனாக நான் இதை நேசித்ததை, இதன் மூலம் கற்றுக்கொண்டதை புறக்கணிக்க முடியாது. அற்புதம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து பலரும் அவரது பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நடந்த உண்மையை சொல்வதில் என்ன தவறு என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இன்று காலையில் தனது எக்ஸ் பக்கத்தில் `துரந்தர்' பற்றிய ஒரு கருத்தை பதிவு செய்தார் ஹ்ரித்திக். அதில் "துரந்தரை இன்னும் என் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. ஆதித்யா நீங்கள் ஒரு அற்புதமான படைப்பாளி. ரன்வீர் அமைதியிலிருந்து வெடிக்கும் படியான என்ன ஒரு பயணம், அது அவ்வளவு சீரானது. அக்ஷய் கண்ணா எனக்கு பிடித்தவர் அதற்கான காரணம் அவரது படங்களில் இருக்கும்.மாதவன் வெறித்தனமான அழகு, வலிமை மற்றும் கண்ணியம்!!
ஆனால் ராகேஷ், நீங்கள் செய்தது அபாரம்.. என்ன ஒரு நடிப்பு, புத்திசாலித்தனம்!! எல்லாருக்கும், குறிப்பாக ஒப்பனை துறைக்கு, ஒரு பெரிய கைதட்டல்! இரண்டாம் பாகத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்!!!" எனப் பாராட்டி இருந்தார். ஒரே நபர் ஒரு படத்தின் அரசியலை நேற்று இன்ஸ்ட்டாவில் விமர்சித்ததும், பின்பு இன்று இட்ட பதிவில் அப்படத்தில் நடித்தவர்களை மட்டும் பாராட்டிவிட்டு நகர்ந்ததும் பேசு பொருளாகி வருகிறது.
`துரந்தர்' படம் வெளியான சமயத்தில் மிகப் பிரபலமான ஊடகம் ஒன்று இப்படத்தை கடுமையாக விமர்சித்தது. ஆனால் ரசிகர்களும், சில பிரபலங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த விமர்சனம் நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷனின் இந்த செயல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

