”பின்னணிப் பாடகராக தொடரப் போவதில்லை!” - ஓய்வை அறிவித்த அரிஜித் சிங் | Arijit Singh
பிரபல பாலிவுட் பாடகர் அரிஜித் சிங். மிகப் பரவலாக அவர் பெயர் அறியப்படவில்லை என்றாலும்கூட, அவர் பாடிய பாடல்களைச் சொன்னால் அது தெரியாத நபர்களே இருக்க முடியாதது. அத்தனை பாடல்கள் நம்முடைய ப்ளேலிஸ்டிலும் இடம்பெற்றிருக்கும். இனி, தான் பாடப்போவதில்லை என இசையில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அரிஜித்.
சிறு வயதிலேயே இசையைக் கற்று வளர்ந்த அரிஜித் சிங், 2005-ல் Fame Gurukul ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதில் அவர் வெற்றிபெறவில்லை என்றாலும், அவரின் தனித்துவமான குரல் நடுவராக பங்கேற்ற சஞ்சயலீலா பன்சாலியை கவர்ந்தது. உடனே அவர் இயக்கி இசையமைத்த உருவாக்கிய `Saawariya' படத்தில் `Yun Shabnami' என்ற பாடலை பாட வைத்தார். ஆனால் கதையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக அப்பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டது. கூடவே அவர் ஒப்பந்தமாகி இருந்த இசை ஆல்பமும் ரத்தானது. அரிஜித்தின் துவக்கமே பல நெகட்டிவ் திருப்பங்களால் அமைந்தது. ஆனாலும் சோர்ந்து போகாமல் தனக்கென ஒரு ஸ்டூடியோ அமைப்பது, பல இசையமைப்பாளர்களுக்கு ப்ரோக்ரமராக பணியாற்றுவது என இயங்கிவந்தார் அரிஜித். 2010இல் நாகார்ஜுனா நடித்த `கேடி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் அவர் பாடகராக அறிமுகமானாலும், அவரது இந்தி அறிமுகப் பாடலாக 2011-இல் Murder 2 படத்தில் ’Phir Mohabbat’ என்ற பாடல் மூலம்தான் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். பின்னர் தொடர்ச்சியாக பல பாடல்கள் அமைந்தன.
எந்த மோஹித் சூரி மூலம் இந்தியில் அவருக்கு அறிமுக பாடல் அமைந்தததோ, அதே மோஹித் சூரி இயக்கிய `Aashiqui 2' படத்தில் `Tum Hi Ho' மூலம் எல்லா மொழிகளிலும் கவனிக்கப்படும் பாடகராக மாறினார். Chennai Expressல் Kashmir Main Tu Kanyakumari, Tamashaல் Agar Tum Saath Ho, Ae Dil Hai Mushkilல் Channa Mereya, Alizeh, Dear Zindagiல் Ae Zindagi Gale Laga Le, OK Jaanuல் Enna Sona, Jab Harry Met Sejalஇல் Hawayein, 99 Songsஇல் Jwalamukhi, Saiyaaraல் Dhun எனப் பலப்பல பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானவை. இந்தி மட்டுமில்லாது பெங்காலி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடியுள்ளார். 2 தேசிய விருதுகள், 8 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பத்ம ஸ்ரீவிருதும் வழங்கப்பட்டது. ஜெய் நடித்த ’புகழ்’ படத்தில் ’நீயே’, ’அடடா என்ன அழகு’, ’24’ படத்தில் ’நான் உன் அழகினிலே’ போன்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த நிலையில் அர்ஜித் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``அனைவருக்கும் வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகளாக, ரசிகர்களாக எனக்கு நீங்கள் அளித்த அளவற்ற அன்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இனிமேல் பின்னணிப் பாடகராக நான் எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இதோடு நான் விடைபெறுகிறேன். இது ஓர் அற்புதமான பயணம்" என அறிவித்திருக்கிறார். திடீரென அவர் ஓய்வை அறிவித்திருப்பது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
