சூரி படப்பிடிப்பில் படகு விபத்து | மீனவர் வலைகள் சேதம்.. அனுமதி பெறவில்லை என புகார்!
தொண்டியில் நடிகர் சூரியின் படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் மீனவர்கள் வலைகள் சேதமானதால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பகுதியில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் ’மண்டாடி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி மாலை முள்ளிமுனை கடல் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஒளிப்பதிவாளர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக படகிலிருந்தவர்கள் தப்பி பிழைத்ததாகவும், கேமரா கடலுக்குள் விழுந்து விட்டதாகவும், அதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் மீனவர்கள் உதவியுடன் கேமராவை தேடி எடுத்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றது.
அனுமதி பெறாமல் படப்பிடிப்பு..
இந்த சூழலில் மீனவர்கள் மட்டும் செல்லும் கடல் பகுதியில் பொதுமக்கள் கூட செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர் பாதுகாப்பு சாதனம் இன்றி படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மேலும் படப்பிடிப்பு நடக்கும் பகுதியை சுற்றி மீனவர்களை தொழில் செய்ய விடாமல் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடலில் மூழ்கிய படகை அப்புறப்படுத்தாததால், மீனவர்களின் வலைகள் சேதமடைவதால் அந்த பகுதியில் மீன்பிடிக்க தடையாக உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை இணை இயக்குனர் கோபிநாத்திடம் கேட்ட பொழுது, கடலில் படகுகளை பயன்படுத்தவோ அல்லது படப்பிடிப்பு நடத்தவோ எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை என்று தெரிவித்தார். மேலும் மெரைன் காவல்துறை உதவி ஆய்வாளரிடம் கேட்டபொழுது கடற்கரை ஓரங்களில் படம்பிடிக்க மட்டுமே அனுமதி பெற்றுள்ளனர், கடலில் செல்ல எந்தவித அனுமதி பெறவில்லை என தெரிவித்தார்.