புதுமையான களம் ஓகே... ஆனால் திரைக்கதை? | Black Gold Review
த்ரில்லர் + பழிக்குப்பழி இணைந்த படமே 'பிளாக் கோல்ட்'(1.5 / 5)
தங்கத்துக்கு (ஏ. வெங்கடேஷ்) சொந்தமான ஒரு முன்னணி முடி ஏற்றுமதி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார் மாரிமுத்து (லிவிங்ஸ்டன்). இவரது மகன் விஜய் (வெற்றி) தன்னுடைய தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என நினைத்தாலும், ஓடி ஓடி உழைக்கிறார். இந்த சூழலில் திருப்பதியிலிருந்து கொண்டுவரப்பட்ட, சுமார் ₹5 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய முடிப் பொதியை கொண்டு சேர்க்கும் வேலை மாரிமுத்துவுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், பாதிவழியில் லாரியும், மாரிமுத்துவும் காணாமல் போக, விஷயம் போலீசுக்கு போகிறது. இந்தச் சம்பவத்தில் மாரிமுத்து முக்கிய சந்தேக நபராகிறார். தனது தந்தை நிரபராதி என நிரூபிக்க விஜய் செய்யும் விஷயங்களே மீதிக்கதை.
இப்படத்தை சுவாரஸ்யமாக்குவது அதன் வழக்கத்திற்கு மாறான கதைக்களம்தான். தமிழ் சினிமா தங்கம், வைரம், போதைப்பொருள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் சம்பந்தப்பட்ட குற்றக் கதைகளை ஆராய்ந்திருந்தாலும், அதிகம் அறியப்படாத முடி ஏற்றுமதித் தொழிலை மையக் கருவாகத் தேர்ந்தெடுத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார்.
வெற்றி வழக்கம்போல தன் மீட்டரில் ஒரு சுமாரான நடிப்பை கொடுக்கிறார். நெகட்டிவ் ஷேட்டில் ஏ. வெங்கடேஷ், அருள், ஜப்பான் மிரட்ட முயல்கிறார்கள். துணைப் பாத்திரங்களில் லிவிங்ஸ்டன், துளசி, அபிராமி வெங்கடாச்சலம், பிரியலயா நல்ல நடிப்பை கொடுக்க முயல்கிறார்கள்.
இந்தப் படத்தின் குறை எனப் பார்த்தால், சுவாரஸ்யமான, புதிதான ஒரு களத்தை எடுத்துக் கொண்டாலும், படமாக மிகவும் சுமாரான திரைக்கதையில் கொடுத்தது தான். படத்தின் எந்த ஒரு காட்சியும் சுவாரஸ்யம் சேர்க்கவில்லை. எடுத்துக் கொண்ட கதைக்களம் போல புதுமையான திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு நல்ல த்ரில்லர் படமாக இருந்திருக்கும்

