\
John Doe Movie Review: Is It a Gripping Crime Thriller?
John DoeJohn Doe

பரபரப்பான க்ரைம் த்ரில்லரா ஜான் டோ? | John Doe | Arjun Das

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்.
Published on: 
சீரியல் கில்லரை துரத்தும் காவலதிகாரியின் பயணமே `ஜான் டோ'(2.5 / 5)

காவல்துறை அதிகாரியான சந்துருவின் (அர்ஜுன் தாஸ்) காவல் எல்லையில், கார் ஒன்றில் பூட்டி வைத்து ஏரியில் தள்ளிவிட்டு சிறுவன் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார் கேரளாவில் பணியாற்றும் சந்த்ரு. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் காணாமல் போகும் ஹ்ரிதய் (நீரவ் S) என்ற சிறுவனைத் தேடும் விசாரணையும் நடைபெறுகிறது. இரண்டு வெவ்வேறு வழக்குகளாகத் தொடங்கும் இந்த விசாரணைகள் எந்த புள்ளியில் இணைகிறது? இவற்றை செய்வது யார்? என்ன காரணம்? இதெல்லாம் சொல்வதே படத்தின் மீதிக்கதை.

John Doe

சீரியல் கில்லர் களம் என்றாலும், குற்றவாளி மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டவர் யார் என்ற மர்மத்தையும் விசாரிக்கும் கதையை கொடுத்ததன் மூலம் படத்தின் மீது ஒரு ஆர்வத்தை கொடுக்கிறார் இயக்குநர் மதுமிதா.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் தாஸ். மாஸ் காட்சிகள் இல்லாமல் ஒரு இயல்பான போலீஸாக தன்னை முன்னிறுத்தி நடித்திருக்கிறார். தன் கடந்த கால பாதிப்பில் சிக்கி திணறுவது, தன்னால் ஒரு சிறுவனை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வை வெளிப்படுத்துவது, சஞ்சனாவுடன் ரொமான்ஸ் என நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். சஞ்சனா நடராஜன் ஒரு அதிரடியான போலீஸ் ஆக, எல்லோரையும் அதட்டுவது, மிரட்டுவது என அசத்துகிறார்.

ஸ்ரிஷ்டி, ஸாரா முதல் படத்தில் தங்களால் முடிந்த அளவு நல்ல நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அனுபமா குமார், கெஸ்ட் ரோலில் வரும் அர்ச்சனா சந்தோக், கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோரின் நடிப்பு சிறப்பு.

முஜீப் மஜீத், தி ஆர்டிஸ்ட் 404 பின்னணி இசை படத்தின் த்ரில் மூடுக்கு உதவுகிறது. ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு மலைப்பகுதிகளின் அழகையும், கதைக்குத் தேவையான மர்மமான சூழலையும் சிறப்பாகக் காட்சிப்படுத்துகிறது.

John Doe

படத்தின் தொடக்கத்திலிருந்தே அடுத்தடுத்து வரும் மர்மங்களும், எதிர்பாராத திருப்பங்களும் பார்வையாளர்களை கதைக்குள் இழுக்கின்றன. குறிப்பாக இரண்டு விசாரணைகளும் ஒன்றாக இணையும் இடம் சுவாரஸ்யம் சேர்க்கிறது. சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைந்தாலும், கதையின் பின்னணியில் இருக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இரண்டாம் பாதியை தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இதனை எல்லாம் செய்வது யார் என்பதை சொன்ன விதம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. ஒரு முக்கியமான பாத்திரத்தை திடீரென அறிமுகம் செய்வது நல்ல திரைக்கதையாக இல்லை. கூடவே சீரியஸ் கதைக்குள் அர்ஜூன் - சஞ்சனா காதல் காட்சிகள் ஏன் என்பதும் புரியவில்லை.

மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யமும் நேர்த்தியும் இருந்திருந்தால், அட்டகாசமான த்ரில்லர் படமாக இருந்திருக்கும் இந்த ஜான் டோ.

John Doe Movie Review: Is It a Gripping Crime Thriller?
‘ஆவேசம்’ மற்றும் ‘சீன்’ இரண்டாம் பாகம்.. பரவிய வதந்தி.. இயக்குநர் விளக்கம்!