"மாஸ் வேண்டாம்.. காமெடி செய்ய சொன்னார் அனில் ரவிப்புடி!" - சிரஞ்சீவி | Chiranjeevi
சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `மன சங்கர வர பிரசாத்'. ஜனவரி 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று மாலை இப்படத்தின் Pre Release நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, "இந்த சங்கராந்தி வெறுமனே `மன சங்கர வர பிரசாத்'க்கு மட்டுமில்லை. டார்லிங் பிரபாஸின் `The Raja Saab', என்னை அண்ணா என அன்போடு அழைக்கும் ரவிதேஜாவின் படம் `Bhartha Mahasayulaku Wignyapthi', எங்கள் வீட்டில் வளர்ந்த பிள்ளை ஷர்வானந்த் நடித்துள்ள `Nari Nari Naduma Murari', என்னை குருவாக மதிக்கும் சிஷ்யன் நவீன் போலிஷெட்டியின் `Anaganaga Oka Raju' ஆகிய அனைவரின் படங்களும் இந்த சங்கராந்திக்கு பெரிய ஹிட் ஆக வேண்டும். அதன்மூலம் அவர்களுக்கு மட்டுமன்றி தெலுங்கு சினிமாவுக்கே வெற்றி கிடைக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.
வெகு காலத்திற்கு முன்பு இயக்குநர் ராகவேந்திரா ராவ் ஒரு விஷயம் சொன்னார். `எனக்கு எப்போதும் அனில் ரவிப்புடி படங்களைப் பார்க்கும்போது, அவருடன் இணைந்து நீங்கள் படம் செய்தால் அந்தக் கூட்டணி அற்புதமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நீங்கள் விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார்' என்றார். அவர் ஆசைப்பட்டபடி இப்படம் நடந்தது. இப்படத்தின் துவக்க விழாவில் அவரிடம் கிளாப் அடிக்கச் சொல்லிதான் துவங்கினோம்.
`Sankranthiki Vasthunam' படத்திற்குப் பிறகு அனில் ரவிப்புடி என்னிடம் வந்து இந்தக் கதையைச் சொன்னபோது, ’குடும்பப் படமாக, உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இதில் உன்னடைய காமெடியும் கலந்தால் இன்னும் சிறப்பாக வரும். இதில் எனக்கு SPG பாத்திரம், மாஸ் ஆக செய்வோம்’ என்றேன். `இல்ல சார் மாஸ் வேண்டாம், `Donga Mogudu', `Gharana Mogudu', `Rowdy Alludu', `Annayya', `Chantabbai'... இந்த மாதிரி சினிமாக்களில் ஜாலியாக உங்களை ரசித்தார்கள். அவர்கள் எல்லோரும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். அது இந்த தலைமுறைக்கு தெரியாது. ஆனால் இடைநிலையில் உள்ள என் தலைமுறை ஆட்கள் அதை இந்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அதைக் காட்டும்படி இந்தப் படத்தில் முயற்சி செய்யப் போகிறேன்' எனச் சொன்னார். நானும் சம்மதம் சொன்னேன். இந்தப் படம் முடிந்தபோது, கல்லூரியில் இருந்து விடைபெறும் கடைசி நாள்போல இருந்தது.
இந்தப் படத்தில் வெங்கடேஷை கொண்டு வரலாம் என்ற யோசனையை நான்தான் கூறினேன். அது எப்படி தோன்றியது என்றால், ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் இருவரும் அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றோம். நண்பர் வீட்டில் நாங்கள் இருந்தபோது எங்களை ஒரு புகைப்படம் எடுக்க வந்தார்கள். அப்போது என்னை அமரவைத்து, வெங்கடேஷ் ’நின்றபடி புகைப்படம் எடுக்க வேண்டும்’ என்றார். ’ஒரு காட்ஃபாதர் படத்தை போல நீங்கள் எனக்கு கட்டளை இட்டால் நான் போய் வேலையை முடிக்க வேண்டும் என்பதை குறிக்கும்படி இருக்க வேண்டும்’ என்றார். அப்போதிருந்து அவருக்கு நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அப்போதிருந்து என் மனதில் இந்த யோசனை இருந்தது. அனில் ரவிப்புடியும் அவருடன் ஒரு படம் செய்துவிட்டு என்னிடம் வரும்போது இதைச் சொன்னேன். அவரும் கதைக்குள் அதனை அழகாக கொண்டு வந்திருக்கிறார். அவர் ஒரு கெஸ்ட் ரோல்தான் செய்திருக்கிறார், முழுப்படம் செய்ய வேண்டும் என அனில் கேட்டார். வெங்கியும் நானும் ரெடி. நீயே அதற்கு கதை எழுதிக் கொண்டுவா" என்றார்

