”ஜூலை 15ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் தொடங்கப்படும்” அதிகாரப்பூர்வ அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் குஷி!

வரும் 15 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய், புஸ்ஸி ஆனந்த்
விஜய், புஸ்ஸி ஆனந்த்புதிய தலைமுறை

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. ‘லியோ’ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

முன்பே பேச்சுவார்த்தை முடிந்துவிட்டாலும்கூட, ஒரு படம் முடியும் தருவாயில் இருக்கும்போதுதான், தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவதை நடிகர் விஜய் வழக்கமாக வைத்திருப்பார். இருப்பினும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே ‘தளபதி 68’ படத்தின் அறிவிப்பு வெளியானது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த ஆச்சர்யம் ஓய்வதற்குள், தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் அரசியலுக்கு ஆயத்தமாகி வருகிறாரென்றும், அதனால் வெங்கட் பிரபு படத்தோடு சினிமாவிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. அதற்கு முன்னோட்டமாகத்தான், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சென்னைக்கு அழைத்து கடந்த மாதம் கல்வி உதவி வழங்கும் விழாவை விஜய் நடத்தியதாகவும் கூறப்பட்டது.

விஜய்
விஜய்புதிய தலைமுறை

அந்த விழா திட்டமிட்டதை விட அதிக காலநேரம் எடுத்துக்கொண்டுவிட்டதால், அப்போது இதனை ஒருங்கிணைந்த தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க முடியாமல் போன நிலையில், சமீபத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டது போன்று, ‘லியோ’ படத்திற்கு முன்னதாக நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கல்வி உதவி வழங்கும் விழாவில், மாணாக்கர்கள் இடையே உரையாற்றிய விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பேசியிருந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இரவு பாடசாலை திட்டத்தை தொடங்குகிறார் நடிகர் விஜய்.

அதாவது 234 தொகுதிகளில் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கவும், இத்திட்டத்துக்கு படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை வைக்கவும் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 234 தொகுதிகளை குறிவைத்தே உலக பட்டினி தினத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவு, கல்வி உதவி வழங்கும் விழா, தற்போது இரவு பாடசாலை என பணியாற்றி வருகிறார் விஜய்.

இந்நிலையில், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தளபதி" அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com