அட்லீ - அல்லு அர்ஜுனின் 'AA22 x A6'.. இணையும் பிரபலங்கள்.. முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகிறது `AA22 x A6'. `ஜவான்' ஹிட்டுக்கு பின் அட்லீயும், `புஷ்பா 2'வின் ஹிட்டுக்கு பின் அல்லு அர்ஜுனும் இணையும் படம் என்பதால், படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் நாயகியாக தீபிகா படுகோனே இணைந்துள்ளார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், மிகப் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
ஜூன் மாதம் மும்பையில் தொடங்கிய இப்படத்தின் முதல் ஷெட்யூலில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, செப்டம்பர் 15ஆம் தேதியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் நடனம் சார்ந்த காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இரவுபகலாக இந்த ஷெட்யூலின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது என சொல்லப்படுகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் அபுதாபியில் துவங்க உள்ளது. இந்த அபுதாபி ஷெட்யூலில் நடிகை தீபிகா படுகோனும் இணைவார் எனச் சொல்லப்படுகிறது. இந்த ஷெட்டியூலில் பிரதானமாக படத்தில் இடம்பெறும் சேஸிங் சார்ந்த காட்சிகள், அபுதாபி பாலைவனத்தில் படமாக்கப்பட உள்ளதாம்.
அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் கிராஃபிக்ஸுக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ளது என்பதால் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய Lola VFX and Fractured FX போன்ற நிறுவனங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். இதற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனே இருவரின் உடல் தோற்றமும், அசைவுகளும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படத்தில் தீபிகா தவிர, ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடிப்பதாகவும், ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஒரு ஹாலிவுட் நடிகரை படத்தில் வில்லனாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.