அஜித் பிறந்தநாள்| அரசியல் ‘தல’யாக விரும்பாத AK.. பகுத்தறிவு பத்மபூஷன் வில்லனான கதை!
நடிகர் அஜித் குமார் மே 1ஆம் தேதி தன்னுடைய 55வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அஜித்குமார் திரைப்பயணம், லட்சியப் பயணம் குறித்து சிறப்பு தொகுப்பு..
பெரும்பாலானோர் சிறுவயதில் இப்படியெல்லாம் ஆகவேண்டும், இப்படியெல்லாம் வரவேண்டும் என்ற கனவுகள், ஆசைகளோடு இருப்பார்கள். ஆனால், ஒரு துறையில் பயணிக்க ஆரம்பித்தபிறகு, அனைத்தையும் மறந்துவிட்டு, அந்த துறையிலேயே வேறு வழியில்லாமல் பயணிக்கத் தொடங்கிவிடுவார்கள். ”நீங்கள் ஆசைப்பட்ட கனவு என்னானது?” என்று கேட்டால் வயதாகிவிட்டது என்பார்கள். ஆனால், அஜித்தை அந்தக் கருத்துக்கு; அந்த விஷங்களுக்கெல்லாம் ’வில்லாதி வில்லன்’ என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், திரைத்துறையில் டாப் ஹீரோவாக இருந்தாலும் இளம் வயதில், தான் விரும்பிய கார் ரேஸிங்கை மறந்துவிடாமல்; துறந்துவிடாமல் தனக்கு பிடித்ததை தயங்காமல் 55 வயதிலும் செய்து ரோல்மாடலாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
நடிகர்களாக இருப்பதால் தனக்கான வாழ்க்கையை வாழ முடியவில்லை என்பார்கள் நடிகர்கள். அஜித் அப்படியல்ல. எப்போதும் தனது ’தொழில் வேறு பர்சனல் வேறு’ என்று அவரது வாழ்க்கையை அஜித்தாக வாழ்ந்துகொண்டே இருக்கிறார். பைக் ரேஸ், கார் ரேஸ், ஏரோ மாடலிங், போட்டோகிராபி, ஃபைக் ட்ரிப் , துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வது என தனக்கு பிடித்தமான வாழ்க்கையை ’அசலாக’ வாழ்கிறார்!
ஒரு பக்கம் மிகப்பெரிய ஹீரோ, மறுபக்கம் ஹீரோயிஸத்தை தூக்கிவீசிவிட்டு தனது மனைவி ஷாலினியுடன் சராசரி கணவர், இன்னொரு பக்கம் ரேஸிங் டீமை ஆரம்பித்து, ஜென்சி கிட்ஸ்களையே வியக்கவைக்கும் விதமாக, சீறி பாய்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் கார் ரேஸர்... இப்படி எல்லா பக்கமும் சிக்ஸர்களாக தெறிக்கவிட்டு எல்லா கால கிட்ஸ்களாலும் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்!
அர்ஜுனன் to ஏகலைவன்..
அஜித்தின் பல படங்களில் அவரது கேரக்டர் பெயர் அர்ஜுனாக இருக்கும். முதல் படத்திலும் அப்படித்தான். ’அமராவதி' அர்ஜுன் தொடங்கி ‘விடாமுயற்சி’ அர்ஜுன் என கேரக்டர் பெயர்கள் அர்ஜுனாக அமைந்தாலும் உண்மையில் தமிழ் சினிமாவில் 34 ஆண்டுகளாக, அஜித் ஒரு ‘ஏகலைவன்’ போல் ஒவ்வொரு நொடியும்... ஒவ்வொரு நிமிடமும் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டே இருக்கிறார் . தன்னை செதுக்கி செதுக்கி உச்சத்தில் இருந்தாலும் கார் ரேஸராக உலகமே வியந்தாலும் ஒரு சுயநலமில்லாத சுயம்புவாக திகழ்கிறார். அதற்கு, உதாரணம்தான் ரசிகர் மன்றங்களை கலைத்தது.
இந்தியாவிலேயே ஒரு சினிமா நடிகரை முதல்வராக்கிய முதல் மாநிலம் என்ற பின்னணியைக் கொண்டது தமிழ்நாடு. ’நாடோடி மன்னன்’ எம்.ஜி.ஆரை தமிழ்நாடாளும் முதல்வராக்கியது. அதுமட்டுமல்ல, சினிமாத்துறையைச் சேர்ந்த 5 பேரை முதல்வராக்கியதும் இதே தமிழ்நாடுதான். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா என ஐந்து பேருமே சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள். இந்தத் தமிழ் மாடல்தான் பின்னாளில் ஆந்திர ’சூப்பர் ஸ்டார்’ என்.டி ராமராவை ஆட்சியில் அமர்த்தியது. இந்தியாவுக்கும் தமிழகமே மாடலாய் விளங்கிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிகழாத ஒன்று கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்தது. முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிட்ட கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என மூவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். இப்படி, சினிமா ஸ்டார்களை அரசியலிலும் ஸ்டார்களாக பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது அவர்களது ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும்தான். இந்தப் பட்டியலில், 2026-ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளரான விஜயையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்படி, அரசியலில் சினிமா ரசிகர்கள் வாக்காளர்களாகவும் பின்னிப் பிணைந்த தமிழ்நாட்டில், ”நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. ரசிகர்கள் தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துகளுக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது எனது எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. நலத்திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல்ல உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து. எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்” என்று தனது-40 வது பிறந்தநாளின்போது அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டார்.
ரோல்மாடலாக வாழும் பத்மபூஷன்..
கடந்த 2011-ம் ஆண்டு, அதுவும் தனது பிறந்தநாளைக் கொண்டாட உற்சாகமாகத் தயாராகிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று அக்கறையாக தடைபோட்டு ’அரசியல் தலயாக’ உருவெடுக்க விரும்பாததோடு , ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்றார்.
அதேபோல், தன்னை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் அரசியல்கட்சிகளையும் அவர்கள் கொடுக்கும் ஸ்ட்டெட்மெண்ட்களுக்கும் உடனுக்குடன், தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் உடனுக்குடன் அறிக்கைகள் கொடுத்து ஆஃப் செய்துவிடுவது அஜித்தின் ஸ்பெஷாலிட்டி!
கடந்த 2019-ஆம் ஆண்டு அஜித் ரசிகர்கள் சிலர், பாஜகவில் இணைந்ததையொட்டி மோடியின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று தொடக்கப்புள்ளியை வைத்தார் தமிழிசை செளந்தரராஜன். அமைதி காக்காமல் கொஞ்சம்கூட தாமதிக்காமல், ”எனக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை. நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் வலியுறுத்துகிறேன்” என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.
’வலிமை’ படம் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியானதையொட்டி ‘அஜித் அரசியலுக்கு வரப்போகிறார்’ என்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கூறியபோது, தனது மேனேஜர் மூலம் ”அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை” என்று விவேகமாக விளக்கம் அளித்து அதிமுகவினரை ஆஃப் செய்தார். ஏன்... இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில்கூட ‘மாற்றம் தேவையில்லை’ என்று தான் கூறியதாக பரவிய வதந்திக்கு உடனடியாக மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் மறுப்பு தெரிவித்தார். அதுதான்; அவர்தான் அஜித்!
அதேபோல், பட்டங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் தனக்கு கொடுத்த ‘தல’, ‘அல்டிமேட் ஸ்டார்’ போன்ற கிரீடங்களையே ’ஏகே 47’ போல் சுட்டுத்தள்ளிய ’ஏகே 55’ இவர். சினிமா வாழ்க்கையில்’ ஏகே 47’-ஐ விட ’வலிமை’யானது இந்த ஏகே 55. குறிப்பாக, ’சால்ட் அண்ட் பெப்பர்’ தலைமுடியுடன் நடிக்க யோசிப்பார்கள். ஆனால், அந்த கெட்-அப்பிலேயே நடித்து செம்ம ஹிட் கொடுத்தவர் அஜித். அதனால்தான், இவர்..... ’தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட தன்னம்பிக்கையாளர்’!. அந்த, மாபெரும் தன்னம்பிக்கையாளர் இன்று 55-வது பிறந்தாளைக் கொண்டாடுகிறார். வெற்றிச் சாதனைகள் இன்னும் இன்னும் அவரைப் பின் ‘தொடரும்’… ஹேப்பி பர்த்டே AK!

