கரூர் கூட்டநெரிசல்| ”தனி நபர் மட்டுமே அதற்கு பொறுப்பாக முடியாது..” - நடிகர் அஜித்குமார் பேச்சு!
கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டநெரிசல் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்தார். தனிநபர் மட்டுமே பொறுப்பாக முடியாது, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது எனவும், ஊடகங்களின் பங்கு பெரிது எனவும் கூறினார். சினிமாக்காரர்களை குற்றம்சாட்டுவது தவறு, கூட்டநெரிசல் நிகழ்வுகள் பல இடங்களில் நடக்கின்றன என அவர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல் படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்தசூழலில் இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பாட்ட நிலையில், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டும், அதனை கண்காணிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்க்குழுவை நியமித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்பேரில் விசாரணை நடைபெற்றுவருகிறது..
தனிநபர் பொறுப்பாக முடியாது..
சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசியிருக்கும் நடிகர் அஜித்குமார், சினிமாகாரர்களுக்கு மட்டும் தான் கூட்டம் கூடுவது போலவும், அதில் மிகப்பெரிய துயரச்சம்பவம் நடைபெறுவது போலவும் பிம்பம் உருவாக்கப்படுவதாகவும், தமிழகத்தில் பல இடங்களில் கூட்டநெரிசலால் துயரச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கரூர் துயரச்சம்பவத்திற்கு தனிநபர் மட்டுமே பொறுப்பாக முடியாது என்றும், அதில் அனைவருக்கும் பொறுப்பிருப்பதாகவும், ஊடகத்திற்கு பெரிய பங்கு இருப்பதாகவும் அஜித் குமார் கூறினார்..
இதுகுறித்து உரையாடலில் பேசியிருக்கும் அஜித்குமார், “கூட்டநெரிசல் ஏற்படும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நிறைய நடக்கிறது. அதற்கு தனிநபர் ஒருவர் மட்டுமே பொறுப்பாக முடியாது. நாம் அனைவருமே அதற்கு பொறுப்பு. ஊடகத்திற்கு இதில் பெரும் பங்கு இருக்கிறது. கூட்டத்தை கூட்டுவதில் தான் பெருமை இருக்கிறது என்று நினைக்கிறார்கள். இது அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும், இப்படியான சம்பவங்கள் சினிமாக்காரர்களால் தான் நடப்பது போல சித்தரிப்பது, முழு திரைப்படத் துறையையும் மோசமானது என வெளிச்சம் போட்டு காட்டுவதுபோல் உள்ளது..
இன்று எனக்கு நல்ல வாழ்க்கை இருக்கிறது, அதற்காக ரசிகர்களுக்கு நன்றி. ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில், தியேட்டர்களின் இருக்கைகள், திரைகளை கிழித்தல், சேதப்படுத்துதல் போன்றவற்றை செய்வது தவறானது. இதெல்லாம் முடிவுக்கு வர வேண்டும். ஊடகங்கள் இதில் பெரிய பங்காற்றுகின்றன, ஊடகத்தில் இந்த நடிகர் அந்த நடிகரை விட அதிக ஓபனிங் கொடுத்துள்ளார் என்று கூறும்போது, அடுத்தமுறை நாம் இன்னும் நிரூபிக்க வேண்டும் என ரசிகர்கள் எடுத்துக்கொள்வார்கள், இவை அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்” என கூறியுள்ளார்..


