”அஜித் சாருக்கு முதல் வாழ்த்து வந்தது விஜய் சாரிடம் இருந்து” வதந்திக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி!
தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமா அளவிலும் கூட இன்று உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமான இடத்தில் உள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித். என்னதான் இவர்கள் நல்ல நண்பர்கள் என அவர்களே பல இடங்களில் கூறியிருந்தாலும், ரசிகர்கள் பொறுத்தவரை சினிமாவில் விஜய்க்கு போட்டியாளர் அஜித் தான், அஜித்துக்கு போட்டியாளர் விஜய் தான். கிட்டத்தட்ட அவர்களை எதிரிகள் போன்று சித்தரித்துள்ள நிலைதான் இருக்கிறது.
விஜய், மாஸ்டர் நிகழ்வில் "நண்பர் அஜித் போல கோர்ட் அணிந்து வந்தேன்" என சில இடங்களில் அஜித்தை பற்றி கூறும் சூழல் அமைந்திருக்கிறது. ஆனால் அஜித் பொது நிகழ்வுகளை தவிர்ப்பவர் என்பதால், விஜய் மீதான நட்பை வெளிப்படுத்தும் சூழல் உருவாகவில்லை.
இப்போது இருவருக்கும் பகை எனக் மீண்டும் பேச்சுக்கள் எழ காரணம், சமீபத்தில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பத்ம விருது பட்டியலில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் அவரின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு துபாயில் கார் ரேஸில் பங்கேற்ற அஜித்தின் அணி, 24 ஹெச். கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தது. தற்போது தீவிரமாக கார் பந்தயத்தில் ஈடுபடும் அஜித் அக்டோபருக்கு பிறகு, நடிப்பில் முழு வீச்சாக இறங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்ற போதும் சரி, பத்ம பூஷன் விருது அறிவித்த பின்பும் சரி, திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் இதை பற்றி பலரும் எழுதி பாராட்டி இருந்தார்கள்.
அஜித்திற்கும் விஜய்க்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு..
இந்நிலையில் அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றபோதும் சரி, அவருக்கு பத்ம பூஷன் விருது கிடைத்து போதும் சரி, அஜித்தின் நண்பரான விஜய் ஏன் அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
மேலும் இப்போது ஒரு நடிகர் என்பதை தாண்டி, தவெக என்ற கட்சியை துவங்கி அரசியல் பயணத்தையும் துவங்கி இருக்கிறார். இப்படி சமூகத்தில் முக்கிய இடத்தில் உள்ள அவர் ஏன் வாழ்த்தவில்லை? அஜித்தை வாழ்த்த விஜய்க்கு மனசில்லையா? அல்லது வாழ்த்து சொல்லக்கூட நேரமில்லையா? என்பது மாதிரியான பேச்சுகளும் வந்தன.
இதை பற்றி அஜித் தரப்பில் விசாரிக்க, அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்ட போது, " அவர்கள் இருவரையும் எதிரிகள் போல் சித்தரிக்க அவசியமே இல்லை. இருவரும் மிக நல்ல நண்பர்கள். ரேஸில் வெற்றி பெற்றதும் அஜித் சாருக்கு முதல் வாழ்த்து வந்தது விஜய் சாரிடம் இருந்து. அதேபோல பத்ம பூஷன் விருது அஜித் சாருக்கு அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது. மிக ஆத்மார்த்தமான நட்பு இருவருக்குள்ளும் இருக்கிறது. எனவே விஜய் சார், வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மை இல்லை'' என்று கூறியுள்ளார் சுரேஷ் சந்திரா.