பத்ம பூஷண் சரோஜா தேவி மறைவு| குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சரோஜா தேவி நேற்று காலமானார். அவருக்கு வயது 87.
நடிகை சரோஜா தேவி, கடந்த 1938ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். 17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர், தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் விருப்பமான கதாநாயகியாக மாறினார். 1955ஆம் ஆண்டு மகாகவி காளிதாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவிக்கு அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு.
விருதுகள் - இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதும், 1969இல் பத்மஸ்ரீ விருதும், 1992 இல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சரோஜா தேவியின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. சரோஜா தேவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது வீட்டின் முன் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரின் மறைவு திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
5 மொழிகளில் பிரபலமான நடிகை என்பதால் அவரது உடலுக்கு கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் திரைத்துரையினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த சரோஜாதேவியின் உடலுக்கு கன்னட திரை உலகத்தை சேர்ந்த சிவராஜ் குமார் மற்றும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள் விஷால், கார்த்தி, அர்ஜீன் உள்ளிட்டோர் சரோஜா தேவியின் உடல் வைக்கப்பட்டுள்ள பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சத்யராஜ், வடிவேலு, வைரமுத்து உள்ளிட்ட துறை பிரபலங்களும் தங்களது இரங்கல் செய்தி தெரிவித்தனர்.
அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!
இன்று காலை கர்நாடக முதலமைச்சர் சித்ராமையா மற்றும் துணை முதல்வர் டி கே சிவகுமார் ஆகியோர் சரோஜாதேவி இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் 11.30 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டது.
அதற்குபிறகு அவரது உடல் கர்நாடக மாநிலம், ராம்னகரா மாவட்டத்தில் உள்ள சென்னபட்டணாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும் வழியில் ராம்நகரில் பொதுமக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் சரோஜோ தேவியின் உடல் தஸ்வாரா கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில், அவருடைய தாயார் சாமாதிக்கு அருகில், ஓக்களிக சமூகத்தின்பாரம்பரியபடி இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது. அதற்கு முன் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கண் தானம்
பல பொதுசேவையில் ஈடுபட்டு வந்த நடிகை சரோஜாதேவி, தன்னுடைய கண்களையும் தானம் செய்திருந்தார். அதன்படி நேற்று சரோஜா தேவியின் கண்கள் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டது. மேலும் அவரின் கண்கள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளதாக கண் மருத்துவர்கள் தெரிவித்தனர்.