மதம் கடந்த காதல் திருமணம் | ட்ரோல் செய்த பதிவுகள்.. கசப்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த ப்ரியாமணி!
தமிழில் ‘பருத்தி வீரன்’ திரைப்படத்தில் நடித்ததன்மூலம் பிரபலமான நடிகை ப்ரியாமணி, தொழிலதிபர் முஸ்தபா ராஜூவை, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், ப்ரியாமணி முஸ்தபாவை காதலித்தபோது, அதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதுகுறித்து ப்ரியாமணி பதிலளித்துக் கொண்டே இருந்தார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “யாரோ ஒருவர், தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், ’உங்கள் திருமண வாழ்க்கை மூலம் உங்களது குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள்’ எனத் தெரிவித்திருந்தார். இது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு மதத்திற்கு இடையேயான ஜோடியை இப்படி குறிவைப்பது ஏன்? ஜாதி அல்லது மதத்தை மீறி திருமணம் செய்துகொண்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்கள் அந்த மதத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் மத வேறுபாடின்றி ஒருவரையொருவர் காதலித்தார்கள்” எனச் சாடியிருந்தார்.
இந்த நிலையில், ப்ரியாமணி சமீபத்திய ஒரு நிகழ்வைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அது, யாரோ ஒருவர் ப்ரியாமணி இஸ்லாத்திற்கு மாறியதாக குற்றம்சாட்டியதற்கு பதிலளித்துள்ளார். தவிர, நாடு முழுவதும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து தாங்கள் ஏன் பதிவிடவில்லை எனவும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கும் சேர்த்தே அவர் பதிலளித்துள்ளார். “நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் முடிவு. நான் மதம் மாறமாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளேன். நான் இந்து மதத்தில் பிறந்தவள். ஆகையால், எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை மதிக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், “நான் ஏன் நவராத்திரிக்கு இடுகையிடவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பினர். எனக்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை. ஆனால், நான் அதனால் பாதிக்கப்படவில்லை. அத்தகைய எதிர்மறைக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்று நான் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.