இரண்டு மாதங்களில் 14 கிலோ.. படத்துக்காக உடல் எடையை அதிகரித்த நிமிஷா சஜயன்!
மலையாள சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவர் நிமிஷா சஜயன். மலையாளத்தில் `Thondimuthalum Driksakshiyum', `The Great Indian Kitchen', `Nayattu' போன்ற படங்களில் கவனம் ஈர்த்தவர் தமிழிலும் `Chithha', `Jigarthanda DoubleX', `DNA' போன்ற படங்களில் நடித்தார். பாலிவுட்டில் `Dabba Cartel' வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானவர், தற்போது நடித்துள்ள இந்திப் படம் ‘Babita Singh Reporting’. கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. பபிதா சிங் என்ற Assistant Sub-Inspector கதாபாத்திரத்தில், அமைதியான, தன்னம்பிக்கை குறைந்த டெஸ்க் அதிகாரியாக இருக்கும் பபிதா, ஒரு கொலை விசாரணையின் மூலம் தனது வாழ்க்கையிலும் தனிப்பட்ட குணத்திலும் மாற்றத்தை சந்திக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தோற்றத்திற்கு ஏற்ப தனது உடலை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்ததால், 58 கிலோவில் இருந்த அவரது எடை 72 கிலோ வரை அதிகரித்தார் நிமிஷா.
இந்த கதாபாத்திரத்திற்கு நிமிஷாவின் உடல் தோற்றமும் முக்கியமாக இருந்ததால், படக்குழுவுடன் இணைந்து அவர் தனது எடையை அதிகரிக்க முடிவு செய்தார். சுமார் இரண்டு மாதங்களில் 14 கிலோ எடையை கூட்டியதாக நிமிஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவில், 58 கிலோவில் இருந்து 72 கிலோ வரை எடை அதிகரித்ததாகவும், ஆரம்பத்தில் தினசரி சுமார் 1,200 கலோரியில் இருந்த உணவு அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இறுதியில் 8,000 கலோரி வரை சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றம் எனக்குச் சாதாரணமான விஷயமாக இருக்கவில்லை. அதிக உணவு, உடல் மாற்றம் மற்றும் அதற்கேற்ப தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது என ஒட்டுமொத்த செயல்முறையும் சவாலாக இருந்ததது. படத்திற்காக எடையை அதிகரித்தது ஒரு பக்கம் என்றால், படப்பிடிப்புக்குப் பிறகு அந்த எடையை மீண்டும் குறைப்பது இன்னும் கடினமான அனுபவமாக இருந்தது. எடைக்குறைப்பு பயணத்தின் முதல் 10 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது, தூக்கமின்மை, மனநிலை மாற்றங்கள், உடல் சோர்வு மற்றும் விரக்தி போன்ற பிரச்னைகளைச் சந்தித்தேன். சில நாட்களில் என்னால் இதைத் தொடர முடியாது என்று எனது பயிற்சியாளர் Ali Shifasடம் அழுதேன். ஆனால் நான் கைவிட நினைத்த நேரங்களிலும் அவர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, மோசமான நாட்களில் என்னை குற்ற உணர்வுக்கு உள்ளாக்காமல் அடுத்த நாளும் முயற்சி செய்ய வைத்தார்.
ஒரு நடிகர், கதாபாத்திரத்திற்காக தனது உடல் தோற்றத்தையே மாற்றிக்கொள்வது சினிமாவில் புதிதல்ல. ஆனால், குறுகிய காலத்தில் எடையை அதிகரித்து, பின்னர் அதை மீண்டும் குறைப்பது உடல் மற்றும் மனரீதியாக கடினமான செயல்முறையாகும். நிமிஷா சஜயனைப் பொறுத்தவரை, ‘Babita Singh Reporting’ படத்தின் கதாபாத்திரத்தை உண்மையாக திரையில் கொண்டுவர வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகவே இந்த 14 கிலோ எடை அதிகரிப்பு அமைந்துள்ளது. அவரின் இந்த கடினமான ட்ரான்ஸ்ஃபர்மேஷனுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

