“முட்டாள் கூட்டம் ஒண்ணு இருக்கு..” யாரைச் சொல்கிறார் நடிகர் சூர்யா?
செய்தியாளர் - கார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவரது சமீபத்தில் வெளியான ‘கருப்பு’, ’விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இதன்மூலம், பழைய ஃபார்முக்கு சூர்யா வந்திருப்பதாக, ரசிகர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். இதற்கிடையே, ’சீன்’ என்ற திரைப்படத்தின் மூலம், தீபாவளி ரேஸிலும் அவர் களமிறங்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த படமும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் பெரும் நம்பிக்கையில் உள்ளனர். இவ்வாறு ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் முனைப்பில் உள்ள சூர்யா, ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசிய கருத்து தான், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, “அன்பை மட்டுமே விதைப்போம். சோசியல் மீடியாவுல ஒரு பெரிய முட்டாள் கூட்டம் இறங்கியிருக்காங்க. அவங்ககிட்ட வாதம் பண்ணா, நாமளும் முட்டாள் ஆகிடுவோம். அவங்க அப்படியே இருக்கட்டும். அவங்கள மாத்த முயற்சி பண்ணுவது ரொம்ப கஷ்டம். ஒரு சிலருக்கு நாம சொல்றது புரியும். ஆனா, அந்த முட்டாள் கூட்டத்துக்கு அது புரியாது. So நேரத்தையும், எனர்ஜியையும் வீணாக்காதீங்க. உங்களுக்குப் பிடிச்சதை தினமும் பண்ணுங்க. கண்டிப்பா, உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எல்லோருக்கும் அன்பை மட்டுமே கொடுங்க” என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் முட்டாள் கூட்டம் ஒன்று உருவாகியுள்ளதாக, நடிகர் சூர்யா யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்பு, நடிகர் விஜய்சேதுபதி பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பேசியபோது, பெரிய வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பிரச்னை வரும்போது எதிரணியினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைமைப் பண்பு கிடையாது என்று பேசியிருந்தார். யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், நடிகர் விஜய்சேதுபதி பேசிய இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதுபோல், தற்போது நடிகர் சூர்யா சொன்ன கருத்துகளும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

