”மேற்கத்திய மக்களே இங்க வர்றாங்க..” நாட்டின் கலாசாரம், பெருமை குறித்து இளைஞர்களுக்கு ரஜினி அறிவுரை!
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், ரஜினிகாந்த். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்திலும் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ”இன்றைய செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாசாரம், பெருமைகள் பற்றி தெரியாமல் உள்ளனர். இன்றைய இளைஞர்கள் நமது கலாசார பெருமையைப் பற்றி அறியாமல் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள்.
மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாசாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என்று இந்தியா வருகிறார்கள். யோகா போன்ற வாழ்வியலை அவர்கள் நாடுகிறார்கள். ஆகவே, நம்முடைய பாரத நாட்டின் கலாசாரம், சம்பிரதாயம், அருமை, பெருமையைக் கொண்டுபோய் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.