Thalaivar 170 | ‘33 வருஷத்துக்கு அப்பறம் என் வழிகாட்டி அமிதாபச்சனோடு...’ - ரஜினி நெகிழ்ச்சி!
‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. செப்டம்பர் 3-ஆவது வாரமே இதற்கான எல்லாவித பணிகளும் துவங்கிவிட்டது.
அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படமானது 2024-ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா புரொடக்ஷன்ஸில் ‘2.0’, ‘தர்பார்’ உள்ளிட்டப் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இப்படத்தில் தமிழ் மட்டுமன்றி பல மொழி நடிகர்களும் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் ஷர்வானந்த், ராணா, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகைகள் ரித்திகா, துஷாரா என்று பல மொழி கலைஞர்களின் கலக்கல் காம்பினேஷனில் படம் தயாரிகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினி, இப்படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் தன் ஆஸ்தான குருவான அமிதாப்பச்சனுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
“லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் த.செ.ஞானவேல் ராஜாவின் இயக்கத்தில் எனது குருவும் வழிகாட்டியுமான அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது” என்று ரஜினி கூறியுள்ளார்.
முன்னதாக ரஜினியும் அமிதாப்பச்சனும் 1983 (Andha Kanoon) 1985 (Geraftaar), 1991 (Hum) ஆகிய 3 படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.