”மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத ஆளு தான் ’ரவி’..” - நடிகர் கார்த்தி
ரவி மோகன் யாருக்கும் மனதளவில் கூட கெடுதல் நினைக்காத ஒரு ஆள் என்று நடிகர் கார்த்தி பாராட்டி பேசினார்.
ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார்.
தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்துவரும் ரவி மோகன், சமீபத்தில் ’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
அதன்படி ’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் தொடக்க பூஜை இன்று தொடங்கியது. இதில் ’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாக்கப்படும் முதல் படத்தில் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தானே நடிக்கப்போவதாக ரவி மோகன் தெரிவித்துள்ளார். இரண்டாவது படமாக யோகி பாபுவை வைத்து இயக்குநராகவும் அறிமுகமாக இருப்பதாக ரவி தெரிவித்துள்ளார்.
’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் தொடக்க நிகழ்வில் நடிகர் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, ஜெனிலியா, சிவராஜ் குமார் போன்ற திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒருஆள் ரவிமோகன்..
’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ திறப்பு விழாவில் பங்குபெற்ற ரவி மோகனின் நண்பரும், சக நடிகருமான கார்த்தி, ரவிமோகனிடம் இருக்கும் பல திறமைகள் குறித்து புகழ்ந்து பேசினார்.
ரவி மோகன் குறித்து பேசியிருக்கும் கார்த்தி, “ரவி கிட்ட எனக்கு பிடிச்ச விசயம் மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு ஆள், அவனால நினைக்கவும் முடியாது அப்படியான ஒருநபர் அவன். இன்னைக்கு அவன் வந்திருக்க தூரம், அவன்கிட்ட பல திறமைகள் இருக்கு, அதபத்தி யாரும் பெருசா சொல்லிருக்க மாட்டாங்க. என்கிட்ட ஒரு படத்திற்கான கதையை விளக்கினார், சிரிச்சிட்டே இருக்கவன்குள்ள இப்படி ஒரு திறமை இருக்கானு ஆச்சரியப்பட்டன். அவன் படத்தை டைரக்ட் பண்ணி நாங்க ரெண்டு பேரும் நடிக்கிறதா இருந்தது.
இன்னும் அவன்கிட்ட இருக்க திறமையை அவர் அண்ணன் கூட படத்துல முழுசா காட்டல. யோகி பாபுவ வச்சி ஒரு டைரக்டரா ரவிமோகன் திறமையை நாம பார்ப்போம்னு நினைக்கிறன். சினிமா அவனுக்கு நல்லா தெரியும், நிறைய உலக சினிமாக்கள கவனிச்சிட்டே இருக்க ஒரு ஆளு, எடிட்டிங்கும் அவனுக்கு நல்லா தெரியும். ஆனா அது வெளில தெரியாது, படிக்கவே இல்லனு சொல்லிட்டு நல்ல மார்க் வாங்குவாங்கல அப்படியான ஒரு நபர் ரவி மோகன்” என புகழ்ந்து பேசினார்.
பின்னர் கார்த்தி குறித்து பேசிய ரவி மோகன், “என்னை வாழ்த்த வேண்டும் என்று வந்திருப்பவர்கள் வாழ்த்துங்கள், வாழ்த்த வேண்டாம் என சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, 'நான் இங்குதான் இருப்பேன்.. யார் என்னை என்ன நினைத்தாலும் என் மீது அக்கறை கொண்ட ஒரு 'நிஜ வந்தியத்தேவன்' கார்த்தி” என்று பேசினார்.