எஃப்1 ரீமேக்கில் நடிக்கிறேனா? நடிகர் அஜித் குமார் பதில்!
ஏ.கே.64 படத்தின் அப்டேட் மற்றும் F1 ஹாலிவுட் திரைப்பட ரீமேக் தொடர்பாக மனம்திறந்து, தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர்அஜித்குமார்.
தி ஹாலிவுட் ரிபோர்ட்டர்இந்தியா ஊடகத்திற்கு நடிகர் அஜித்குமார் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில், தமிழ் மொழியை சரியாக பேச இயலாமல் சிரமப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சிலர் தனது பெயரை திரைத் துறைக்காக மாற்றச் சொல்லி அறிவுறுத்தியதாகவும், ஆனால் தனது பெயரை மாற்ற முடியாது என்று அப்போதே தாம் முடிவெடுத்ததாகவும் அஜித் கூறியுள்ளார். கார்ரேஸிங்கில் நல்வாய்ப்பாக மிக மோசமான காயங்கள் தமக்கு ஏற்படவில்லை என்று கூறியுள்ள அஜித், இதுவரை 29 அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெற்றி என்பது முரட்டு குதிரையைப் போன்றது எனவும், அதனை கையாளத் தெரியவில்லை என்றால், நம்மை தூக்கி எறிந்துவிடும் எனவும் அஜித் அட்வைஸ் வழங்கியுள்ளார். தமக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் ஆடம்பரத்தை வழங்கினாலும், தனது நேரத்தைப் பறித்துக்கொண்டதாக அஜித் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஏன் நீங்கள் சராசரி தந்தையைப்போல எங்களிடம் இருப்பதில்லை என்று தனது பிள்ளைகள் தன்னிடம் கேட்பதாகவும் அஜித்குமார் உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஏ.கே.64 திரைப்படத்தின் அறிவிப்பு வருகிற ஜனவரி மாதம் வெளியாகும் எனவும், F1 ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் அமைந்தால், தாம் நடிப்பேன் எனவும் அஜித் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

