“எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு மூன்றாவது நபரே காரணம்” - ஆர்த்தி ரவி 5 பக்க அறிக்கை!
நடிகர் ரவி மோகன், ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே, நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் சமீபத்தில் பிரபல திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பாடகி கெனிஷாவும் பதில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன்; இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். தற்போது நான் எடுத்த முடிவால் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குழந்தைகள்தான் எனது பெருமை; மகிழ்ச்சி. அவர்களுக்காக அனைத்தும் செய்வேன்” என அதில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் வெளியிட்ட அறிக்கைக்குப் பதில் தெரிவித்து ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், ”இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித்தள்ள வேண்டும் என முடிவு எடுத்த நீங்கள், அதைக் கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். இன்று, என் கண்ணியமும் நேர்மையும், உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளதை வேதனையோடு கடக்க முயற்சிக்கிறேன். உண்மை தெரிந்த ஒரே நபர், என் கணவர். ஆனால் அவரே எனக்காக நின்று பேச மறுக்கிறார். அவருக்கு நிம்மதி கிடைக்கவே உண்மையில் நான் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி, உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது.
அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்தால், என் சொந்த அடையாளத்தில் இதைவிட இருமடங்கு வசதியான, உயர்வான ஒரு வாழ்கையை நான் வாழ்ந்திருப்பேன். காதலின் பேரில், நம்பிக்கையின் பேரில் வாழ்ந்துவிட்டேன். திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை, நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறுவதைக் கேட்கும்போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது” என அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும், அது அவரது விருப்பத்தினால்தான் இருந்திருக்க முடியுமே தவிர, கட்டாயத்தினால் அல்ல. உண்மையில், அவர் என் பிடியில் இருந்து தப்பிச்செல்ல நினைத்திருந்தால், நேராக அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்தச் சதியை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். தனது சொத்துகளை, கெளரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டைவிட்டு வெளியேறிப் போகவில்லை.
மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து தனக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ரூ.5 கோடி மதிப்புள்ள Range Rover காரில்தான் வீட்டை விட்டுச் சென்றார். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு மூன்றாவது நபரே காரணம். ‘உங்கள் வாழ்வின் ஒளி’ என அறியப்படும் அவர், நம் வாழ்வில் இருளைக் கொண்டு வந்துள்ளார். என் கணவருக்கு நிம்மதி கிடைக்கவே நான் விரும்புகிறேன். ஆனால், அந்த நிம்மதி, எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.