நாயகன் | இளையராஜா கரங்களில் உயிர்பெற்ற ஆன்மா!
இசையின் நாயகன்
இளையராஜாவின் மேஜிக்கில் திரைப்படங்கள் நம்மை மகிழ்விக்கும். சில படங்கள் மனதை வருடும். இன்னும் சில, இதயம் கனக்கச் செய்யும். ஆனால், சில திரைப்படங்கள் காலம் கடந்தும் cult ஆக நிலைபெறும். கதையால், ஆக்கத்தினால், இசையால், தாக்கத்தினால், நிசப்தத்தின் இடைவெளிகளில் பிறக்கும் சத்தமற்ற உணர்வுகளால் மண் மூடிய விதையாக உயிர்ப்புடனே இருக்கும். 1987ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் 'நாயகன்' அப்படியான ஒரு திரைப்படம். கமல்ஹாசனால் ஒளிரூட்டப்பட்ட வேலுநாயக்கர் என்ற மனிதனின் வாழ்க்கை கதை மட்டுமல்ல; இசைஞானியின் கரங்களால் இசையாக உயிர் பெற்ற ஆன்மா.
ஒளியும் நிழலும் -ஓசையும் நிசப்தமும்:
'நாயகன்' கேங்ஸ்டரின் கதை மட்டும் அல்ல; தந்தையை இழந்த 10 வயது சிறுவனின், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் கோபம் கொண்ட இளைஞனின், தன்னைச் சுற்றியுள்ள ஏழை சமுதாயத்திற்கு உதவ எதையும் செய்யத் துணியும் பெரிய மனிதனின், தான் நல்லவரா கெட்டவரா என்று கடைசிவரை சொல்லவியலாத ஒரு வயதான தந்தையின், தாராவி மக்கள் தங்கள் உயிரையே கொடுக்கத் துணியும் ஒருவனின் கதை.. வேலு நாயக்கரின் கதை.. சகாப்தத்தின் கதை.. அந்தக் கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் நாயக்கரை நாம் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் இளையராஜா அவரூடே இசையாக பயணிக்கிறார். நாயக்கருக்கு மிக அருகிலிருந்து அவரைப் புரிந்துகொள்ள நமக்கு இடமளிக்கிறார்.
நாயகனின் anthem “தென்பாண்டி சீமையிலே”
தமிழ் திரையுலகம் ஒரு ஒலி வடிவம் பெற்றால், அது "தென்பாண்டி சீமையிலே" எனலாம்... திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு படபடப்புடன் தொடங்கும் இசை நம்முள் மெல்ல மெல்ல ஊறி இறங்கும். தூத்துக்குடியில் தந்தையை தன் கண்முன் பறிகொடுத்த அனாதைச் சிறுவனாய் வேலு, ரயில் ஏறி பம்பாய் வந்திறங்கும்போது, ராஜாவின் குரல் நெஞ்சைப் பிழியும் கனத்துடன் எந்த பின்னிசையுமில்லாமல் "தென்பாண்டிச் சீமையிலே" என நமது மனதில் பாரம் ஏற்றும். வேலுவின் துயரத்தை ராஜாவின் குரலில் உணரலாம். வேலு, ஹுசைன் பாயிடம் வந்துசேரும்போது அதே "தென்பாண்டி சீமையிலே"... இப்போது கமல் குரலில் ஒரு மெல்லிய புல்லாங்குழல் பின்னணியுடன் இதமாக தாலாட்டும் தாளத்துடன்.
நாயகன் படம் முழுதும் பல பரிமாணங்களில் தென்பாண்டி சீமையிலே ஒலிப்பதையும், படத்தின் பாதியிலேயே நம்மையும் அறியாமல் அந்த மெட்டுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுத்து விடுவதையும் யாராலும் மறுக்க முடியாது. வேலு நாயக்கர் என்ற கேங்ஸ்டரின் மென் உணர்வுகள் வெளிப்படும் இடமெல்லாம் "தென்பாண்டி சீமையிலே" பின்னணியில் ஒலிப்பதை உணர்வோம். ஒரு சகாப்தத்தின் சரிவைப்போல நாயக்கரின் மரணத்தின் மீது ஒலிக்கும் "தென்பாண்டி சீமையிலே" நம் தலையில் இடியை இறக்குவதுபோல பெரும் முரசு கொட்டி முடிவடையும். ஒரு ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியை, ஒரு பெருங்கதையின் இறுதியை, ஒட்டுமொத்த மக்களின் அதிர்ச்சியை சோகத்தை அந்த இறுதி முரசு கொட்டும் ஒலியில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருப்பார் ராஜா. மணிரத்னம் இப்படத்திற்கு பிரம்மாதமாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் என்பதில் ஐயமில்லை... ஆனால், இசையால் ஒரு திரைக்கதை எழுதி இதனை இழைத்து இழைத்து இயக்கியுள்ளார் இளையராஜா என்றால் அது மிகையில்லை.
"நாலு பேருக்கு உதம்னா எதுவும் தப்பில்ல" என்ற வசனத்தை அதனோடு இணைந்தே வரும் தென்பாண்டி சீமையிலே தொடக்க இசையோடு மட்டுமே நம்மால் நினைவில் கொள்ள முடியும். அதே போலதான் "நீங்க நல்லவரா கெட்டவரா" என்ற வசனம் வரும் இடமும். அந்த வசனம் வெறுமனே பேசப்பட்டதல்ல. இசைக்கப்பட்டது. மணிரத்னம் படங்களில் வசனம்கூட பேசாத உணர்வுகளை இருளும் ஒளியும் மௌனமும் பேசிவிடும். அப்படி எந்தெந்த இடங்களில் நிசப்தத்தை மட்டுமே இசையாகத் தந்து நம் ஆன்மாவை கிளற வேண்டும் என்பதை நன்கறிந்தவர் இசைஞானி. முக்கிய வசனங்கள் வரும் பெரும்பாலான இடங்களில் பின்னணி இசை இருக்காது. ஆனால் அதன் முடிவிலோ தொடக்கத்திலோ செதுக்கிய அளவில் இசை மீட்டியிருப்பார், அவ்விசை படம் முழுதும் நம் மனதை மீட்டும்.
"விட்டுடுங்க அப்பா... எல்லாத்தையும் நிறுத்துங்க" என வேலு நாயக்கரின் மகள் அவரிடம் கெஞ்சும்போது, ''இவர்களையெல்லாம் நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்'' என்று பேசுவார் கமல். Iconic காட்சி அது என்றே சொல்லலாம். அதில் எந்த பின்னணி இசையுமில்லாமல் ஒரே டேக்கில் கமல் இந்த வசனத்தை பேசுவார். கடைசியாக "உங்க அம்மாவை நடு ராத்திரி ஒருத்தன் சுட்டுக் கொன்னான் பார், அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்" என்று கமலின் குரல் உடையும்போது புல்லாங்குழல் பின்னணியில் தென்பாண்டி சீமையிலே உருகி ஓடும். யாராலும் இந்தக் காட்சியை சற்று கலங்காமல் பார்க்க முடியாது.
“நீ ஒரு காதல் சங்கீதம்” — நாயகியின் கீதம்
துப்பாக்கி சத்தத்திற்கும் துயரத்திற்கும் குருதிக்கும் நடுவில், ஒரு சிறிய இளைப்பாரலை தருகிறார் இளையராஜா இப்பாடலின் வாயிலாக... விலைமாது விடுதியில் நாயகியை சந்திக்கிறார் வேலு. நாளைக்கு கணக்கு பரீட்சை, அதனால் கொஞ்சம் சீக்கிரமா விட்டுடுறீங்களா எனக் கேட்கும் நாயகி சரண்யாவின் முகத்தை காண கட்டில் கடந்து வருவார். ஒரு மெல்லிய சஸ்பென்ஸ் போன்ற பின்னணியிசை ஒலிக்கும்.
’’ஸ்கூல்ல படிக்கிறாயா?’’ என வேலு கேட்க
ம்யும்... மருளும் பூனைபோல பெரிய பெரிய கண்களுடன் உம் கொட்டுவார் நாயகி சரண்யா...
எந்த ஸ்கூல்?
தாதபாய் நவுரோஜி ஸ்கூல்...
என்ன படிக்கிற?
SSC... (அந்தக் கால பதினோராம் வகுப்பு)
ஒரு 16 வயது பள்ளிக்கூட பெண்ணுக்கா இந்த நிலை என பரிதாபமும், புணர வந்தவனிடம் கணக்கு பரீட்சைக்கு படிக்க நேரம் கேட்ட பெண்ணை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வமும், அவளைப் பார்த்தவுடன் வேலுவின் வெட்டுப்பட்ட இதயத்தின் இடுக்கில் பூத்த காதலும் என அனைத்து உணர்வுகளுக்குமான பின்னணியை ராஜாவின் வயலின்கள் மீட்ட நாம் அந்த காட்சியின் கனத்தில் அசைவற்று போயிருப்போம்...
மிகவும் கடினமான மனிதர்களுக்குள் கூட ஒரு மென்மையான பக்கம் இருக்கும். இரத்தத்திலும் துரோகத்திலும்கூட ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது. அதுபோல மலர்ந்தது "நீ ஒரு காதல் சங்கீதம்" பாடல். ஹிந்துஸ்தானி தேஷ் ராகத்தில் அமைந்த இப்பாடல் அந்த ராகத்துக்கே உரிய தன்மையான இதமான காதலையும் தெய்வீகத்தையும் கலந்து காதுகளில் பாய்ச்சும்.
நாயகன் முழுதும் ராஜாவின் ஆதிக்கம்:
நாயகி அறிமுகத்துக்கு முன் "நான் சிரித்தால் தீபாவளி" கொண்டாடிக் களிக்க "அந்தி மழை மேகம்" என படத்தின் எல்லாப் பாடல்களையும் புலமைப் பித்தன் எழுதியிருந்தாலும், "நிலா அது வானத்து மேல" பாடலை எழுதியவர், பாடியவர் இசைஞானியே. தென்பாண்டி சீமையில் அழ வைப்பவர், "நெலா அது வானத்து மேல" யில் போதையேற்றி குத்தாட்டம் போட வைப்பார். 'நிலா'வை 'நெலா'வாக்கியதும் அந்த பாடலின் முக்கியமான வைப்...
படத்தில் எங்கே எப்போது இசையைக் கைவிட வேண்டும் என்று அறிந்தவரும் அவரே. ஒரு நிமிடத்தில் இசை மறைந்து, ஒரு மூச்சு, ஒரு குழந்தையின் குரல், அல்லது இதயத் துடிப்பு மட்டும் கேட்கும். அந்த மௌனமே மிகப்பெரிய இசையாக தோன்றும். உண்மையான இசை ஒலியில் இல்லை; உணர்வில்தான் உள்ளது என்பதை படம் முழுதும் உணர்த்தியிருப்பார்
நாயகன் மீண்டும் வரார்....
38 ஆண்டுகள் கடந்தும், நாயகன் இன்னும் தமிழ் திரையுலகின் பெரும் படைப்பாக பொக்கிஷமாக இருக்கிறது. நாயகனின் தோற்றம் கமலாகவும், இதயம் மணிரத்னமாக இருந்தாலும் அதன் துடிப்பு இசைஞானியால் நிலைபெற்றது. இளையராஜா நாயகனுக்காக இசையமைக்கவில்லை. அவர் நாயகனாகவே மாறி இசையமைத்தார்.
’நாயகன்’ மீண்டும் வெளியிடப்படும் இந்நாளில் நாம் உணரவேண்டியது அது 1987க்கு மட்டுமே சொந்தமான இசையல்ல. மானுடத்தையும் காதலையும் நேசத்தையும் துக்கத்தையும் ஏக்கத்தையும் பெருங்கோபத்தையும் கொண்ட எந்த ஒரு மனிதனுக்குமானது... அது எல்லா காலத்திலும் நம்மோடு பொருந்திப்போவது. ராஜா அளித்த இசைக் கொடைகளுள் தலைமையானது.

