GTA ஸ்டைலில் ராமாயணம்! ராவணன் உடன் நீங்களும் சண்டையிடலாம்! தயாராகும் பிரம்மாண்ட வீடியோ கேம்!
ராமாயணத்தின் முக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய வீடியோ கேம் உருவாகி வருகிறது. ஜடாயுவுடன் பறப்பது, ராவணனுடன் போரிடுவது போன்ற அனுபவங்கள் இதில் இடம்பெறும். ராமாயணத்தை உலகளாவிய பிராண்டாக மாற்ற தீம் பார்க், அருங்காட்சியகம் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.
செய்தியாளர் -M.மீரா
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின்உலகளாவிய வசூல் ரூ.1,814.55 கோடியைக் கடந்துள்ளதாகவும், இதன் மூலம் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற ஜிடிஏ (GTA) வீடியோ கேம் பாணியில், ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வீடியோ கேம் உருவாகி வருவதாக ராமாயணம் படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்த கேம் தற்போது தயாரிப்பு நிலையில் இருப்பதாகவும், விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் விளையாட்டின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழந்தையும் ஜிடிஏ விளையாடுவதைப் போல ராமாயணத்தையும் விளையாட வேண்டும். அதே நேரத்தில் விளையாடிக்கொண்டே நமது கலாச்சாரத்தையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த கேமில் ராமாயணத்தின் முக்கியக் காட்சிகளை விளையாட்டு அனுபவமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜடாயுவுடன் வானில் பறப்பது, ராவணனுடன் போரிடுவது போன்ற காட்சிகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத் துறையைவிட வீடியோ கேம் துறை தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறிய நமித் மல்ஹோத்ரா, ராமாயணத்தை உலகம் முழுவதும் அறியப்படும் ஒரு பிரபலமான பிராண்டாக மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக வீடியோ கேம் மட்டுமின்றி, தீம் பார்க், அருங்காட்சியகம், அனிமேஷன் தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

