ஒரு வணிகனின் கதை 22 | கற்கை | தொழிலில் வெற்றி காணவேண்டுமா? எனில் இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்!

நாம் ஒரு புதிய தொழில்முனைவோர் எனில், செய்யப்போகும் தொழிலில் நிச்சயமாக அனுபவம் தேவை! மிக எளிய வழி, அதே தொழில் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் ஈட்டுவது!
தொழில் - கேள்விகள்
தொழில் - கேள்விகள்freepik

முன்குறிப்பு:

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 22 - கற்கை

சேகருக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம். அவருக்குச் சொந்தமான டைல்ஸ் கடை ஒன்று அம்பாசமுத்திரத்தில் இருந்தது. சேகருக்கும், எனக்கும் நட்பு ஏற்பட்டதே ஒரு சுவாரசியமான நிகழ்வுதான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முதல் தடவையாக, அவர் எனது கடைக்கு வந்திருந்தார். அவரது விசிட்டிங் கார்டைத் தந்து அறிமுகம் செய்துகொண்டு பின்னர் ஆரம்பித்தார்.

”நேரடி மொத்தக் கொள்முதல் செய்கிறீர்களா சார்? திருநெல்வேலி ஸ்டாக்கிஸ்டிடம் வாங்குவதை விட குறைவான விலைக்கு ஏற்பாடு செய்து தருகிறேன்”

ஆனால், அதற்கு முன்னதாகவே நான் நேரடிக் கொள்முதலை ஆரம்பித்துவிட்டிருந்தேன். இருப்பினும் தகவல் தெரிந்துகொள்வதற்காக பேச்சுக் கொடுத்தேன்.

“என்ன விலை ஆகும்? 2x2 போர்சலின் மேட்டுக்கு சொல்லுங்க?”

அப்போதைய விலையைச் சொன்னார். சுமாராக 400 என்று நினைவு.

“உங்க குடோன் எங்க இருக்கு? நீங்க ஹோல்சேல் மட்டும்தான் பண்றீங்களா?”

“இல்லை சார். ஹோல்சேல் மட்டுமில்லை, ரீடெயிலும் பண்ணுகிறேன். எங்கள் கடையும், குடோனும் அம்பாசமுத்திரத்தில் இருக்குது. கடையை என்னோட கஸின் பார்த்துக்குறார். நான் ஒரு ஐடி எம்ப்ளாயீ! ஹைதராபாத்தில் இருக்கிறேன். லீவுல வரப்பவெல்லாம் இது மாதிரி மார்க்கெட்டிங் பண்ணுவேன்”

“எவ்வளவு நாளாக பண்ணுகிறீர்கள்?”

“இரண்டு வருடங்களாகின்றன!”

என்னை விடவும் ஜூனியர்!

என்ன வேலை செய்கிறார், எப்படி ரிமோட்டில் கடையை மேலாண்மை செய்கிறார், நான் இந்தக் கடையை தொடங்குமுன் அவரைப் போல வேலை பார்த்துக்கொண்டிருந்தவன்தான் என்றெல்லாம் மேலும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரது சிரிப்பும், பேச்சும், அணுகுமுறையும் மிகவும் இனிமையாக இருந்தது. அந்தப் பதினைந்து நிமிடத்துக்குள்ளாக இருவருமே நட்பாகிவிட்டிருந்தோம்.

“எத்தனை சோர்ஸ் டெவலப் பண்ணி வைச்சிருக்கீங்க?”

“4 பேர் இருக்காங்க”

“நீங்க எப்படி சாப்ட்வேர்ல இருந்துகிட்டு இந்தத் தொழிலில் இறங்கினீங்க?”

“ஏதாச்சும் தனியா பண்ணனும்னு ஆசை! நிறைய ஒர்கவுட் பண்ணிப் பார்த்தேன். இது செட்டாகும்னு தோணுச்சு. கஸ்டமர் சப்போர்ட்ல இருக்கிறதால இந்தியாவுல எல்லா ஊரும் தெரியும். குஜராத்லாம் தண்ணி பட்டபாடு!”

“கிட்டத்தட்ட என் கதையைக் கேட்கிற மாதிரியே இருக்கு! நான் மெக்கானிகல், நீங்க சாப்ட்வேர், அவ்வளவுதான் வித்தியாசம்!”

அவருக்கும், எனக்கு இன்னொரு வித்தியாசமும் இருந்தது. அதை அவரிடம் சொல்லவில்லை, உங்களுக்கு முடிவில் சொல்கிறேன்.

”சரி சேகர், டைல்ஸ் குவாலிடியெல்லாம் எப்படி இருக்கும் சேகர்?”

“கமர்ஷியல் எல்லாம் நான் பண்றதில்லை சார்! எக்ஸ்போர்ட் குவாலிடி ப்ரீமியம் டைல்ஸ் மட்டும்தான்.”

முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டேன்,

“அதே எக்ஸ்போர்ட் குவாலிடி ப்ரீமியம் போர்சலின் 2x2 டைல்ஸ், உங்களுக்கு நான் ரூ.380க்கு ஏற்பாடு பண்றேன், வாங்கிக்கிறீங்களா?”

ஒரு விநாடி திகைத்தார். நானும் அதற்கு மேல் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்க, அவரும் புரிந்துகொண்டு சிரித்தார்.

“ஏன் சார் ஓட்டுறீங்க? நீங்களும் டைரக்டா பர்ச்சேஸ் பண்றீங்கனு முதலிலேயே சொல்லியிருக்கலாம்ல!”

“நானும் பின்ன எப்படித்தான் மார்க்கெட் நிலவரத்தைத் தெரிந்துகொள்வது? வாண்டடாக வந்தத் தகவலை எப்படி மறுக்க முடியும்?”

அதன் பின்னர், இருவரும் நட்பாகிவிட்டோம். பல நேரங்களில், லாப நோக்கின்றி சில தகவல்களை பறிமாற்றம் செய்துகொள்வோம்.

அவர்தான், நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று நேரில் வந்திருக்கிறார். வழக்கமான நல விசாரிப்புகள், டீ உபசரிப்பு எல்லாம் முடித்துவிட்டுக் கேட்டேன்.

“சொல்லுங்க சேகர், என்ன விஷயம்?”

சிரித்துக்கொண்டே சொன்னார்.

”எப்படிச் சொல்றதுனு தெரியல, இந்தக் கொரோனாவுக்குப் பிறகு மீளவே முடியல கேகே! ஹெவி காம்பெடிஷன் வேற! பெரிய லாஸ்! அதோட நான் இங்க இருந்தாக்கூட பரவாயில்லை. ரிமோட்ல கடையை மேனேஜ் பண்ணமுடியல, கடையை மூடிட்டேன்!”

உண்மையாகவே அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது.

“அச்சச்சோ, என்னவாயிற்று சேகர்? ஏன் இப்படி திடீர்னு?”

பின்னர் அரைமணி நேரத்துக்கும் மேலாக நிறைய பேசினோம். அவரது குடோனில் எஞ்சியிருந்த டைல்ஸை குறைந்த விலைக்கு எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்கவே வந்திருக்கிறார்.

அவரது வீழ்ச்சிக்கு ஓரிரு காரணங்களில்லை, சிலபல காரணங்களின் மொத்தத் தொகுப்புதான் அவரை வீழ்த்தியிருக்கிறது.

இந்த அனுபவத்திலிருந்து நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன அல்லவா? அவற்றைப் பட்டியலிடுகிறேன், பாருங்கள்!

உங்கள் தொழிலை எந்த இடத்தில் தொடங்கப்போகிறீர்கள்? உங்கள் சந்தை எது?

உங்கள் வாடிக்கையாளர் யார்?

உங்கள் மீதான நற்பெயரை எப்படி ஏற்படுத்தப்போகிறீர்கள்?

உங்களைத் தேடி வாடிக்கையாளர்களை எப்படி வரவழைக்கப்போகிறீர்கள்?

தேடி வந்த வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக புரிந்துகொண்டு ஒரு விற்பனையை அவருக்கும், உங்களுக்கும் நிறைவாக எப்படி பூர்த்தி செய்வீர்கள்?

பொருட்கள், அல்லது இடுபொருட்களை எங்கிருந்து, எப்படி, எந்த விலையில் வாங்குவீர்கள்?

எந்தப் பொருளை, எந்த அளவில் வாங்கி வைக்கப்போகிறீர்கள்?

இன்வெண்ட்ரி மேலாண்மையைப் பற்றி அறிவீர்களா?

உங்களுக்கான பொருளாதார பலம் எது அல்லது யார்?

தயாரிப்பு எனில் தயாரிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடவிருக்கும்/ விற்பனை எனில் அதில் ஈடுபடவிருக்கும் பணியாட்கள் யார்? எத்தனை பேர்?

வேறு என்னென்ன சோர்ஸஸ் அதற்காக உங்களுக்குத் தேவைப்படுகிறது?

உங்கள் தொழிலுக்கான சட்டப்பூர்வ தேவைகளை எப்படி பூர்த்தி செய்வீர்கள்? துல்லியமான வரவுசெலவுக் கணக்கினை பராமரிக்கப்போவது யார்?

ஒரு நிறுவனத்தின் அடிப்படைச் செயல்பாடுகள் (Functions) என்னென்ன?

தொழில் - கேள்விகள்
ஒரு வணிகனின் கதை 21: தொழிலில் முடிவெடுத்தல் ஏன் முக்கியம்?

அவற்றை எந்தளவுக்கு நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்?

உங்கள் பொருளுக்கான/ சேவைக்கான சரியான விலையை

எப்படி நிர்ணயிப்பீர்கள்? உங்கள் விற்பனை இலக்கு என்ன?

அந்த இலக்கை அடைய உங்களிடம் ஒரு செயல்திட்டம் (Plan) இருக்கிறதா?

இயக்க மேலாண்மை செய்யப்போவது யார்? நீங்களா? அல்லது வேறு யாரிடமும் தரப்போகிறீர்களா?

தொழிலை தனித்துச் செய்யவிருக்கிறீர்களா? அல்லது பார்ட்னர்ஷிப்பா? பார்ட்னர்ஷிப் எனில் அவர்களின் பார்ட்னர்களின் பங்களிப்பும், தலையீடும் வரையறுக்கப்பட்டுவிட்டதா?

இப்படி, இந்தக் கேள்விகளை இன்னும் தொடர்ந்துகொண்டே போகலாம்!

இதில் எத்தனைக் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறது? இதற்கெல்லாம் எவ்வளவு ஆக்கப்பூர்வமான பதிகளைத் தருகிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி காண்பதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

ஒரே ஆள் இத்தனையிலும் கரைகண்டுவிட்டு அப்புறம் தொழிலை ஆரம்பித்துக்கொள்ளலாம் என்பதெல்லாம் நடக்கிற கதையா என்ன? இதில் போதுமான கேள்விகளுக்கு நாம் தயாராக இருக்கிறோம் எனினும், பிறவற்றுக்கு என்ன செய்யலாம்?

நாம் ஒரு புதிய தொழில்முனைவோர் எனில், செய்யப்போகும் தொழிலில் நிச்சயமாக அனுபவம் தேவை! மிக எளிய வழி, அதே தொழில் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் ஈட்டுவது! சேகருக்கும் எனக்கும் இருந்த வித்தியாசம் அதுதான்.

நான் எஞ்சினியரிங் துறையை விட்டு விலகி இந்தத் தொழிலில் இறங்கத்தான் போகிறோம் என்று முடிவானதும், முதல் வேலையாக கிட்டத்தட்ட சம்பளமே இல்லாத பணியாளனாய் சிட்டிக்குள் இருக்கும் நண்பர் ஒருவரின் டைல்ஸ் கடையில் சுமார் ஒரு வருடம் பணியாற்றினேன். அதுவே போதவில்லை என்று பிற்பாடு எனக்குத் தோன்றாமலில்லை. அவர் மட்டும் உருப்படியாக ஒரு சம்பளம் கொடுத்திருந்தால் மேலும் ஒரு வருடம் பணியாற்றியிருப்பேன்.

ஆனால், அவர் குடும்ப நண்பர். எனது நோக்கமும் அவருக்குத் தெரியும் என்பதால், கறாராக இருந்துவிட்டார். இப்படிப் பணிபுரிவது, நாம் எந்த சேவையை, பொருளை விற்கவிருக்கிறோமோ அதைப் பற்றிய தொழில்நுட்பங்களை கற்க பேருதவியாக இருக்கும். ஆனால், தொழில்நுட்பங்களைத் தாண்டியும் பரவலாக பல விஷயங்களில் நமக்கு அறிவும், அனுபவமும் தேவைப்படுகிறது.

தொழில் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வது மற்றும் ஏராளமான மனிதர்களை சந்தித்த/ எதிர்கொண்ட அனுபவம் என்பது இன்றியமையாதது. ஒரு பொருளை உற்பத்தி செய்வது அல்லது கொள்முதல் செய்வது என்பதைத்தாண்டி ஒரு சிறு நிறுவனம் சரியாக செயல்பட ஒரு சிறப்பான இயங்குதளத்தினை உருவாக்குவது, அதன்படி இயங்குவது, அதைப் பராமரிப்பது என்பது மிக முக்கியமானது. அதாவது முழு நிறுவனத்தையும், அதன் செயல்பாடுகளையும் சிறப்புற மேலாண்மை செய்யும் திறன்!

தொழில் - கேள்விகள்
ஒரு வணிகனின் கதை 20 | எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம் வேண்டும்! ஏன் தெரியுமா?

மொத்தமாக தொழில் மேலாண்மை!

20 ஆண்டுகள் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து, நிறைய மனிதர்களையும், நிறுவன அமைப்புகளையும் பார்த்து நான் அனுபவம் பெற்றிருந்தாலுமே சமயங்களில் எல்லாமே ஒரு மேக மூட்டமாகவே தெரிவதுண்டு.

ஆக, கற்றல் ஒரு முடிவில்லாத தொடர் செயல்பாடு! மேலாண்மைத் திறனையும், அதன் உட்கூறுகளையும் கற்கத்தான் வேண்டும்! இவற்றையெல்லாம் உங்களுக்குச் சொல்லித்தரவும், தெரிந்தவற்றை மேம்படுத்தவும் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஏராளமான புத்தகங்களும், ஆன்லைன் கோர்ஸ்களும் இருக்கின்றன. நமக்கேற்ற, நம் தொழிலுக்கேற்ற புத்தகங்களை வாங்கிட, கோர்ஸ்களில் இணைந்திட தயக்கம் காண்பிக்காதீர்கள். எல்லாத் திறனையுமே, நமக்குக் கல்வியும், பயிற்சியும்தான் அளிக்கிறது.

பெரும்பாலான கோர்ஸ்கள், புத்தகங்கள் பயனுள்ளவையாக இருக்கும். ஆயினும், சில சொதப்பல்களும் இருக்கலாம். சமீபத்தில் ஓர் ஆன்லைன் கோர்ஸில் இணைந்தேன். 'உங்கள் விற்பனையை எப்படி அதிகரிப்பது' என்பது அதன் தலைப்பு! ஆனால், விற்பனையைப் பற்றி அந்த பயிற்சியாளர் எந்தப் புதிய விஷயத்தையுமே சொல்லிவிடவில்லைதான்.

மாறாக, அவரிடமிருந்து வேறு ஒரு புதிய விஷயத்தைக் கற்க நேர்ந்தது. எல்லா கோர்ஸுகளும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், வசதியான நேரமான காலை 10 மணி, மாலை 7 மணிக்கும் நடக்கும்போது, இந்தப் பயிற்சியாளர் மட்டும், அதிகாலை 5 மணிக்கு அவரது பயிற்சி தொடங்கும் நேரமாக வைத்திருந்தார். அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து குளித்து அலுவலகம் செல்வது போல நன்றாக ஆடையுடுத்தியிருக்க வேண்டும், எல்லோரும் கட்டாயம் விடியோ காலில் வந்தாக வேண்டும் என்று விதிமுறைகள் வேறு. அப்படியே அந்த வகுப்பில் கலந்துகொண்டேன்.

தொழில் - கேள்விகள்
ஒரு வணிகனின் கதை 18 | தொழிலில் என்னென்ன மாதிரியான கேள்விகளெல்லாம் எழக்கூடும்?

அந்தப் பயிற்சியாளர்,

“எல்லோரும், அதிகாலை எழுந்து குளித்துக் கிளம்பி, உற்சாகமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறீர்கள் அல்லவா? இதுதான் உங்கள் விற்பனையை அதிகரிக்க ஒரே வழி!”

என்று அவர் வடிவேலு பாணியில் முடித்துவிட்டாலும், அதிலும் ஒரு பயனுள்ள செய்தி இல்லாமலில்லை!

*

நண்பர் சேகரின் தொழில் வீழ்ச்சி எத்தகைய வலி மிகுந்ததாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அவர் தொழிலை ரிமோட்டில் இயக்கிவிட முடியும் என்று நினைத்ததுதான் அவர் செய்த தவறா? அல்லது அனுபவமின்மையா? அல்லது வேறென்ன காரணங்களெல்லாம் இருக்கலாம்? உங்கள் கருத்தைக் கூறுங்கள். அடுத்து சந்திக்கிறேன்.

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com