ஒரு வணிகனின் கதை 14 | பேரம் பேசுவதை தவிர்க்க முடியாதுதான்... ஆனா அதுக்குன்னு....!

ஒரு வணிகனின் கதை தொடரின் 14-வது அத்தியாயமான இதில், பேரம் பேசுவதால் விற்பனையாளர் சந்திக்கும் சூழல்கள் குறித்து பார்ப்போம்.
ஒரு வணிகனின் கதை 14
ஒரு வணிகனின் கதை 14 freepik

இத்தொடரின், ஒவ்வொரு அத்தியாயமும் தொடக்கநிலை குறுந்தொழில் முனைவோரிடம் இருக்க வேண்டிய ரிஸோர்ஸஸ், குணங்கள் என்னென்ன, அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நுட்பங்கள் என்னென்ன, அவற்றின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதையெல்லாம் அனைவருக்குமான வாசிப்புக்கு ஏற்றவகையில் எழுத்தாளரின் நேரடி அனுபவத்திலிருந்து ஒரு நாவலின் சுவாரசியத்தோடு விவரிக்கப்படுகிறது.

ஒரு வணிகனின் கதை
ஒரு வணிகனின் கதை

உற்பத்தி மற்றும் சேவைக்கும் இவற்றைப் பொருத்திப் பார்க்க ஏதுவாக இருக்கும். தொழில் முனைவோர், ஆர்வம் கொண்டோர் இவற்றை ஒரு செக்லிஸ்ட்டாக போட்டுப் பார்த்துக்கொண்டு, தம்மிடமிருக்கும் நிறை, குறைகளை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து குறைகளைக் களையும் வழியறிந்துகொண்டு, நிறைகள் தரும் உற்சாகத்தோடு தொழிலில் முனைப்போடு அவர்கள் களமிறங்க வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்!

தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்!

அத்தியாயம் 14 - பேரம்

டைல்ஸ் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அளவு கேட்கப்பட்டு, கணக்கிடப்பட்டு எல்லாம் முடிந்திருந்தது. சேரன்மகாதேவியிலிருந்து வந்திருந்த இந்தக் கஸ்டமர் மிகக் கடுமையாக பேரம் பேசியிருந்தார், அவரை சமாளிப்பதற்குள் ஒரு வழியாகியிருந்தேன்.

புதியவர்களுடன் பேசுவதற்கே தயக்கம் காட்டும் ஆட்களுக்கு, பேரம் பேசுவது என்பது ஆகக் கடினமான பணி. நானும் கூட ஒருவகையில் அவர்களில் ஒருவன்தான். அதனால்தான், நான் பணியாற்றிய நிறுவனங்களில், எத்தனையோ தடவைகள் ’விற்பனைப் பிரிவுக்கு உங்களைப் போல டெக்னிகல் அறிவு கொண்ட ஆட்களும் தேவை, வாருங்கள்’ என்றழைத்தும் மறுத்திருக்கிறேன். ஆனால், இப்போது குளத்தில் குதித்துவிட்டு எனக்கு நீச்சல் வராது என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. தத்தக்காபுத்தக்கா என்றாவது நீச்சலடித்துதான் ஆகவேண்டும். 

ஒரு புலியின் லாகவத்தோடு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து இரையை நெருங்குவது போல பேரத்தைத் தொடக்க வேண்டும். ஒரு செஸ் விளையாட்டில், எத்தனை தூரத்துக்கு அடுத்தடுத்த நகர்வுகளை உங்களால் கணிக்க முடியும் என்பதற்கு ஒப்பான விளையாட்டு இந்த பேரம். அதனால்தான் பேரம் பேசவேத் தயாராக இல்லாமல், ஒரே விலை எனும் போர்டுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள் சில விற்பனையாளர்கள்.

எவ்வித பேரத்துக்கும் இடமின்றி, ஏஸி காட்சியகம், கணினியில் பில்லிங் என்று முன்னேறிய சிட்டி வகைக் கடைகளின் விலை அவர்களின் போட்டியாளர்களின் விலையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களும் கொள்முதல் செய்யப்படும் இடங்களில் சரியான கருத்துகளோடு கூடிய பேரத்துக்குத் தயாராக இருக்கத்தான் வேண்டும். போலவே, சில பொருட்களில்/ சந்தைகளில்/ விற்பனையில் இப்போதும் நீங்கள் பேரத்தைத் தவிர்க்கவே முடியாது. குறிப்பாக இறுதிப் பயனாளிகளுக்கும், உங்களுக்கும் இடையே எக்காரணம் கொண்டும் ஒரு தொழில்காரர் வருவாராயின் பேரம் தவிர்க்க இயலாததாகிவிடும்.

வாங்கும் பொருளைப்பற்றி, அது எங்கே, எப்படித் தயாராகிறது? அதன் பயன்பாடுகள் என்ன? சுமாராக அதன் மார்க்கெட் விலை என்ன இருக்கும்? போன்ற குறைந்தபட்ச அறிவாவது பேரம் பேச முயல்பவர்களுக்கு இருக்க வேண்டும். சுற்றுலாத்தலங்களில் ஒரு வகையான விற்பனையைப் பார்க்கலாம். உதாரணமாக சிறு கைவினை, கலைப் பொருட்களை எடுத்துக்கொள்வோம்.

அவை நாம் அன்றாடம் பார்க்காத, நமது சந்தையில் கிடைக்காத பொருட்களாக இருக்கும். அவற்றின் தயாரிப்பு, விலை பற்றிய அறிவு நமக்கு இருக்காது. சிப்பிகளால் செய்யப்பட்ட ஒரு அழகிய சுவரலங்காரப் பொருள். ரூ. 1000 சொல்லப்படுகிறது என்று எடுத்துக்கொண்டால், அது உழைப்புக்கான கூலியும் சேர்த்து சுமார் 850க்கு செய்யப்பட்டு சரியான லாபத்துடன் 1000க்கு விற்கப்படுகிறதா? அல்லது வெறும் 50 க்கு செய்யப்பட்டு இத்தனை லாபத்துக்கு விற்கப்படுகிறதா? என்று நமக்குத் தெரியாது.

(சில அரிய வகை சிப்பிகளால் செய்யப்பட்டால், இதைவிட அதிக லாப சதவீதத்துடன் கூட அந்தப் பொருள் விற்கப்படலாம், அதில் தவறில்லை. ஒரு பொருளின் லாப சதவீதம் என்பது அதன் உற்பத்தியையும், தேவையையும் பொருத்தது. இங்கே பேசுபொருள் அதுவல்ல)

ஒருமுறை, ரூ.1000 சொல்லப்பட்ட அப்படியான ஒரு கலைப்பொருளை நான் தயக்கத்தோடே 800க்குப் பேரம் பேசி வாங்க முயற்சிக்கவும், அந்தக் கடைக்காரர், அதில் தமக்கு இருக்கும் லாபம் குறைவானது என்றும், இது மிக அரிதானது என்றும், 800 தமக்குக் கட்டுப்படியாகாது எனவும் வாதிட்டு கடைசியில் ரூ.850க்கு தந்தார். நான்கு கடைகள் தள்ளி, அதே பொருளை இன்னொரு நபர், ரூ.300க்கு எளிதாக பேரம் பேசி வாங்கியதைப் பார்த்த பின்னர்தான் உரைத்தது, நமது மண்டை மிளகாய் அரைப்பதற்கு எத்தனை வாகாக அமைந்திருக்கிறது என்று!

இந்த சேரன்மகாதேவிக்காரர், முதலிலேயே பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக என் மீது சைக்காலஜிக்கலான தாக்குதல்களைத் தொடுத்திருந்தார் அவர். கிட்டத்தட்ட முந்தின அத்தியாயத்தில் முத்துராஜ் கேட்ட அதே கேள்விகள்தான். ஆனால், இவரின் தொனியும், நோக்கமும் வேறு. 

ஒரு வணிகனின் கதை 14
ஒரு வணிகனின் கதை 13 | ஒரு பதிலுக்காக காலவரையின்றி காத்திருக்க வைக்கும் கேள்விகளும் உண்டு!

“டிசைன்லாம் கம்மியாக இருக்குதே?”

வழக்கமான பதில்களைச் சொன்னேன்.

“ரேட்டுலாம் அதிகமா சொல்றீங்களே அண்ணாச்சி? ஆலங்குளத்துக்காரனே 3 ரூவா கம்மியா குடுக்குறான்.”

அவர் சொல்லும் தகவல் உண்மையாகவும் இருக்கலாம், அரைகுறையாகவும் இருக்கலாம், அல்லது முழுப் பொய்யாகவும் இருக்கலாம்.

“கம்பெனி, தரம் எல்லாம் இருக்குல்லங்க! நாம நல்ல கம்பெனில, நல்ல தரமான பொருளை வாங்கிட்டு வர்றோம். மத்தவங்க என்ன பண்றாங்கனு நமக்குத் தெரியாதுல்ல. இருந்தாலும் நம்ம விலை சிட்டியை விட குறைச்சல்தான்!”

“அதெல்லாம் எந்த கஸ்டமர் பாக்குறான்? என்னத்தையாவது உடையாத டைல்ஸா இருந்தாப் போதாதா? விலைதானே முக்கியம்!”

நமது தன்னம்பிக்கையை சிறிது சிறிதாக உடைக்கும் செயல்! மையமாகச் சிரித்தேன்.

“சரி, ஃபைனலா என்னனு தருவீங்க? நான் யாருனு தெரியும்ல, சேர்மாதேவிலருந்து உங்களை தேடி வந்திருக்கேன். மாசத்துக்கு ரெண்டு வீடு பண்ணுவேன். பேட்டைக்கு போக முடியாமலா? நல்லா பண்ணினீங்கன்னா, வழக்கமா இங்கயே வந்துடலாம்!”

இப்போது ஆசை காட்டும் படலம்! இதுவும் நிஜமாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்!

எல்லாம் முடிந்து, இங்கு வழக்கமான கஸ்டமர்களுக்கு கொடுக்கும் விலையை விடவும் 1 ரூபாய் குறைத்திருந்தேன். சற்றே அதிகமான தள்ளுபடிதான். சரி போகிறது, ஒரு புதிய கஸ்டமர் கிடைத்தால் சரிதான்! 

பில்லை எழுதிக் கையில் கொடுத்தேன்.

அதிர்ச்சியடைந்தார். அல்லது அப்படி நடித்தார்.

“என்ன சொன்ன ரேட்டையே போட்டிருக்கீங்க?”

“சொன்னது 33. என்னோட ரெகுலர் காண்ட்ராக்டர்களுக்கு கொடுக்குறது 32. அதைவிடவும் குறைச்சி 31 போட்டிருக்கேன். இதுவா உங்களுக்குச் சொன்னது?”

“30 ஆவது போடுங்க, நமக்குள்ள இப்படி பிடிச்சபிடியா இருந்தா என்ன அர்த்தம்? நாளைப் பின்ன வரவேண்டாமா? உங்க அப்பா, சித்தப்பால்லாம் எனக்கு நல்ல பழக்கம். அந்த மீசைக்காரரு, சேர்மாதேவியில மேலத்தெருவுல. அவர் பேரு… ஆங், கஜேந்திரன்! உங்க சித்தப்பாதானே?”

“ஆமா!”

“அவரு சொல்லிதான் நாங்க வந்தோம்!”

ஒரு வணிகனின் கதை 14
ஒரு வணிகனின் கதை 13 | ஒரு பதிலுக்காக காலவரையின்றி காத்திருக்க வைக்கும் கேள்விகளும் உண்டு!

கஜேந்திரனுக்காக அல்ல, இந்தப் பேச்சு விடாமல் போய்க்கொண்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அதோடு இவர் லேசில் விடுகிற நபரே இல்லை, நாளை வரையானாலும் இந்த ஒரு ரூபாய்க்காக பேசுகிற வகை! எந்தக் காரணத்துக்காக 1 ரூபாயை குறைத்தோமோ, அதே காரணங்களுக்காக இன்னும் 1 ரூபாயைக் குறைக்கலாம்! ஆனால், அது வரை என் முகத்தில் இருந்த புன்னகை போயிருந்தது. வலுவில் புன்னகைக்க முயன்றேன்.

“இவ்வளவு சொல்லியாச்சு. இன்னும் அதையே சொன்னால் என்ன அர்த்தம்! சரி, இந்த வாட்டி 30க்கு எடுத்துக்குங்க!”

முத்துவை பொருளை எடுத்து ஏற்றச்சொல்லிவிட்டு, பில்லை இப்போது அவரிடம் கொடுத்தேன்.

“7800 கொடுங்க!”

அடுத்த சிக்கல், தொகையை முழுமையாக்குகிறேன் பேர்வழி என்று ரூ. 7500 தருவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன. 20 ரூ, 30 ரூ முழுமையாக்கினால் பரவாயில்லை. ரூ.200, ரூ.300ஐ எல்லாம் முழுமையாக்குவதில் சமயங்களில், விலை அநியாயத்துக்கு அடிவாங்கிவிடுகிறது. ஏற்கனவே அதிகபட்சமாக குறைத்துவிட்டோம் என்பதால், இந்தாளை விடவே கூடாது. ரூ.7500 தந்தால், சட்டென கோபப்பட்டுவிடாமல், பேச வேண்டிய கருத்துகளை அசை போட்டுக்கொண்டிருந்தேன். 

மீண்டும் மீண்டும் எண்ணி, சில ஐநூறு ரூபாய்த் தாள்களை நீட்டினார். எண்ணிப் பார்த்தேன். ரூ.7000 இருந்தது. அதிர்ச்சி மற்றும் கோபத்தின் உச்சிக்கே போனேன். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க,

“என்னது 7000ம்தான் இருக்கு!”

“பரவாயில்ல, ரவுண்டாக்கி விடுங்க!”

“ரவுண்டா, பிடிங்க பணத்தை!”

“அதெல்லாம் சரியா வரும்! பாருங்க அண்ணாச்சி!”

“முத்து, நிப்பாட்டு. ஏத்தாத! இந்தாங்க அண்ணே, பிடிங்க பணத்தை!”

”என்ன அண்ணாச்சி நீங்க? சரி, இந்தாங்க”

இன்னொரு ஐநூறு ரூபாய் நோட்டு வந்தது. என் மூச்சு திரும்பியது. அந்த 300 ரூபாய் போனதும் தெரியவில்லை. அதற்காக நான் யோசித்துக்கொண்டிருந்த கருத்துகளும் எங்கே போயின என்று தெரியவில்லை!

ஒரு வணிகனின் கதை 14
ஒரு வணிகனின் கதை 12 | தொழிலில் ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

*

இந்த சேரன்மகாதேவிக்காரரின் பேரத்தின் பிடி எவ்வளவு இறுக்கமாக இருந்தது? அதுவும் இறுதியில் எப்படி எனக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி காரியத்தைச் சாதித்துக்கொண்டார் பார்த்தீர்களா? இவரை நீங்கள், எப்படி சமாளித்திருப்பீர்கள்? சொல்லுங்கள், அடுத்து சந்திக்கிறேன்.

*

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com