இந்தியர்களின் பழக்கமே பாரம்பரிய முறையில் சேமிப்பதுதான். குறிப்பாக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட், தங்கத்தை வாங்குவது. வங்கியில் ஆர்.டி போடுவது போன்றவைதான். இவையெல்லாம் நல்ல மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் என்றாலும் சில நேரங்களில் அவை பண வீக்கத்தை விட குறைவான வருவாயை கொடுக்கின்றன. இதனால், நாம் செய்யும் சேமிப்புகள் விலைவாசிக்கு ஏற்றவாறு அதிகரிக்காமல் போய்விடுகின்றன.
எனவே பண வீக்க விகிதத்தை ஒப்பிட்டு, வயதிற்கு ஏற்றவாறு சில சிறிய ஆபத்து மட்டுமே உள்ள முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். குறிப்பாக மியூசுவல் பண்டுகளில், நமக்கு மொத்தமாக கிடைக்கும் தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாத மாதம் கிடைக்கும் சிறு தொகையை மாத தவணை முறையில் முதலீடு செய்து வரலாம்.
உதாரணமாக 25 வயது நபர் ஒருவர், 5 ஆயிரம் ரூபாயை 12 விழுக்காடு வட்டி வழங்கும் மியூசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்கிறார். என வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளில் 9 லட்சம் ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தால் 14 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதேபோல 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என முதலீட்டை நீட்டிச் செல்லலாம். 25 வயது நபர் 25 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், 50 வயதில் அவருக்கு சுமார் 85 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் துணிந்து எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து பல்வேறு மியூட்சுவல் திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன. மியூசுவல் பண்ட் திட்டங்கள் பங்குச் சந்தையின் ஆபத்துகளுக்கு உட்பட்டது என்றாலும், நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றவைதான் என அத்துறை வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.