அடுத்த பத்தாண்டுகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரிதாக உயராது : மாருதி சுசூகி
அடுத்த பத்தாண்டுகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரிதாக உயராது : மாருதி சுசூகி தலைவர் ஆர்சி பார்கவா
தற்போது எலெக்ட்ரிக் வாகனத்துறை வேகமாக வளர்ச்சி அடையும் துறையாக பலராலும் பார்க்கப்பட்டாலும், அடுத்த பத்தாண்டுகளுக்கு பெரிய ஏற்றம் இருக்காது. தவிர இந்தியாவுக்கு மேற்கத்த்திய நாடுகளின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை பயன் தராது என மாருதி சூசுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறியிருக்கிறார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசி இருக்கிறார்.
எலெக்ட்ரிக் வாகனம் தொடர்பாக சில முக்கியமான கருத்தினை பார்கவா கூறியிருக்கிறார். மேற்கத்திய நாடுகளின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை இந்தியாவுக்கு பயன் தராது. மாற்று வழியை இந்தியா கண்டறிய வேண்டும். ஐரோப்பாவின் தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தனிநபர் வருமானம் 5 சதவீதம் அளவில்தான் இருக்கிறது. அதேபோல அமெரிக்காவின் தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது 3 சதவிதம் மட்டுமே இந்தியர்களின் தனிநபர் வருமானம் இருக்கிறது. அதனால் இந்தியர்கள் தனிநபர் போக்குவரத்தை பெரிதும் விரும்பவில்லை. அதற்கு அவர்களின் பொருளாதாரம் இடமளிக்கவில்லை.
இந்தியர்கள் தனிநபர் போக்குவரத்துக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சர்வதேச அளவில் இரு சக்கர வாகனங்களை இந்தளவுக்கு யாரும் பயன்படுத்த மாட்டார்கள். இந்தியாவில் 20 கோடி இரு சக்கர வாகனங்கள் உள்ளன. ஆனால் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடும் இந்தியாவில் குறைவு. ஐரோப்பாவில் 50 சதவீதம் அளவுக்கு கார் ஊடுருவி இருக்கிறது. அமெரிக்காவில் 87 சதவீதம் அளவுக்கு பயன்பாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் 3 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இதிலும் சிறிய கார்களின் பங்கு மிகவும் அதிகம். ஆனால் அமெரிக்காவில் சிறிய கார்களின் பங்கு மிகவும் குறைவு.
எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம் என்பதால் சிறிய ரக கார்களை பயன்படுத்தும் இந்தியர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாறுவதற்கு மேலும் காலம் ஆகும். இதைவிட முக்கியம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 75 சதவீதம் அளவுக்கு நிலக்கரி சார்ந்தே இருக்கிறது என்பதால் எலெக்ரிக் வாகனத்தை பயன்படுத்துவதால் கார்பன் உமிழ்வை குறைக்க முடியாது.
சிஎன்ஜி வாகனம்
இதற்கு மாற்றாக சி.என்.ஜி வாகனங்கள் இருக்கும். ஆனால் சிஎன்ஜி வாகனங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் குறைந்த கார்பன் உமிழ்வு இருக்கும் சிஎன்ஜி வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் கார்களுக்கு இணையாக 28 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை அடைவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். அதுவரை சிஎன்ஜி வாகனங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கலாம். சிஎன்ஜி, பயோ சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இதனால் கார்பன் உமிழ்வு குறையும். மேலும் பேட்டரிக்கு தேவையான லித்தியம் மற்றும் கோபல்ட் இந்தியாவில் இல்லை.
2025-ம் ஆண்டு வரை மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யும் திட்டமில்லை. அதுவரை சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களில் கவனம் செலுத்த இருக்கிறோம் என பார்கவா தெரிவித்திருக்கிறார்.
மாருதி நிறுவனம் 2010-ம் ஆண்டு சிஎன்ஜி வாகனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதுவரை 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. டாடா உள்ளிட்ட சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்தும் சூழலில் மாருதி சி.என்.ஜி.யில் கவனம் செலுத்த இருக்கிறது.