"எந்த நிறுவனமும் தப்ப முடியாது.. நிதானம் அவசியம்" - AI தொடர்பாக சுந்தர் பிச்சை சொல்வது என்ன?
கூகிளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, AI துறையில் ஏற்பட்டுள்ள அதீத முதலீட்டு ஆர்வம் ஒரு குமிழியை உருவாக்கி வெடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார். AI-யின் முதலீட்டில் நிதானம் அவசியம் எனவும், AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அதிவேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் தற்போதைய போக்குகள் குறித்து முக்கியமான எச்சரிக்கைகளையும், ஆழமான கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, AI துறையில் பெருகி வரும் முதலீட்டு ஆர்வம் வரவேற்கத்தக்கது என்றாலும், இதில் 'உண்மை நிலைக்குப் பொருந்தாத' அதீத எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிபிசி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், சமீபகாலமாக AI நிறுவனங்களின் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், இந்த முதலீட்டு வேகம் ஒரு குமிழியை உருவாக்கி, அது வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலகளவில் அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இதுகுறித்துக் கூறுகையில், "AI துறையில் ஏற்பட்டுள்ள இந்த அதீத முதலீட்டு ஏற்றத்தின் காரணமாக AI bubble Burst ஆனால், ஆல்ஃபபெட் உட்பட எந்தவொரு நிறுவனமும் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. இது, 2000-ஆம் ஆண்டு ஏற்பட்ட டாட்-காம் குமிழியின் போது நிலவிய அதீத எதிர்பார்ப்புக்கு இணையானது. இணையத்தைப் போலவே AI-யும் ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம்தான். ஆயினும், முதலீட்டு அணுகுமுறையில் நிதானம் அவசியம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், AI சிப்களை உருவாக்குவது முதல், தரவுச் சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடுவது வரை கூகிள் தன்னுடைய பணிகளை ஒருங்கிணைத்து வருவதால், AI சந்தையில் சவால்கள் ஏற்பட்டாலும், மற்ற நிறுவனங்களைவிட கூகிள் அவற்றைச் சமாளிக்கும் நிலையில் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், AI கருவிகள் வழங்கும் தகவல்களைப் பயனர்கள் 'கண்மூடித்தனமாக நம்பக் கூடாது' என்று சுந்தர் பிச்சை வலியுறுத்தினார்.
தற்போதைய அதிநவீன AI மாதிரிகள் "பிழைகள் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது" என்பதால், படைப்பாற்றலாக ஏதாவது எழுத வேண்டும் என்றால் AI கருவிகள் உதவும். ஆனால், துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களுக் Google Search போன்ற பிற கருவிகளுடன் இணைத்தே பயன்படுத்த வேண்டும். கூகிளின் சமீபத்திய AI நுகர்வோர் மாதிரியான ஜெமினி 3.0 சந்தையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தேடல் தளத்தில் AI-ஐ ஒருங்கிணைப்பது "AI தள மாற்றத்தின் ஒரு புதிய கட்டத்தை" குறிப்பதாக அவர் விவரித்தார்.
எனினும், AI பயன்பாட்டிற்குத் தேவைப்படும் மிக அதிகப்படியான ஆற்றல்/மின்சாரம் காரணமாக, 2030-க்குள் தாங்கள் நிர்ணயித்திருந்த சில இலக்குகளை அடைவதில் சற்றுக் காலதாமதம் ஏற்படலாம் என்பதையும் அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “AI-ஐ மனிதகுலம் கண்டறிந்ததிலேயே மிகவும் முக்கியமான தொழில்நுட்பம். இது சமூகத்தில் சில குழப்பங்களையும், வேலைவாய்ப்புச் சந்தையில் மாற்றங்களையும் கொண்டு வரலாம். எனினும், AI கருவிகளைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்குபவர்களே எதிர்காலத்தில் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்கள்” என்று அவர் உறுதியளித்தார்.
AI போன்ற இவ்வளவு சக்தி வாய்ந்த தொழில்நுட்பம், எந்த ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட கட்டுப்பாட்டிலும் இருக்கக் கூடாது எனவும் சுந்தர் பிச்சை வலியுறுத்தினார்.
இதன் ஒரு பகுதியாக, AI-இல் உருவாக்கப்பட்ட படங்களை எளிதில் கண்டறிய உதவும் தொழில்நுட்பத்தை பொதுப் பயன்பாட்டிற்காக (Open-Sourcing) இலவசமாக வெளியிடவுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது. மேலும், பிரிட்டனில் AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுமார் ₹5000 கோடி வரை ஆல்ஃபபெட், முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சையின் இந்த எச்சரிக்கைகள், AI துறை அதிவேகமாக வளர்ந்தாலும், அதில் நிதானமான முதலீடும், அதன் பயன்பாட்டில் விழிப்புணர்வும் அவசியம் என்பதை உணர்த்துகிறது.

