ஜாக்பாட் செய்தி.. 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை! 1 வருடத்திற்கு பின் சரிவு!
ஒரு வருடத்திற்கு பின் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் குறைந்தது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்காவின் பணவீக்கம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 லட்சத்தை கடந்த தங்கத்தின் விலை, தொடர்ந்து அதிகரித்து வரலாற்றில் உச்சபட்ச விலையாக 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி கொடுத்தது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலரின் மதிப்பு, பணவீக்கம் மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படும் நிலையில், அமெரிக்கா-ஈரான் போரைத் தொடர்ந்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துகொண்டே இருந்தது. அது ஒரு லட்சம், 1 லட்சத்து 10 ஆயிரம் என கடந்து அதிகபட்சமாக 1 லட்சத்து 30 ஆயிரம் வரை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் தள்ளியது.
இந்தசூழலில் தான் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வந்தது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால், அந்நாட்டின் அரசு நிதி பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது. இதனால், மிகவும் பாதுகாப்பான மற்றும் வட்டியை தரும் அந்த அரசு பத்திரங்களை வாங்குவதற்காக, பலரும் தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தான், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துக் கொண்டே வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்புவரை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 615 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 1 லட்சத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது ஒரு வருடத்திற்கு பின் தங்கத்தின் விலை 1 லட்ச ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது.
சமீபத்திய விற்பனை அப்டேட்டின் படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,470க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.10,205க்கும், சவரனுக்கு ரூ.81,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.190க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகைவிலை 1 லட்சத்திற்கு கீழ் சென்றது நகைப்பிரியர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தியாக மாறியுள்ளது.

