செக் முறை ரத்தாக வாய்ப்பு: இந்திய வணிகர்கள் சங்க செயலாளர் தகவல்
வங்கிகளில் வழங்கப்படும் காசோலை சேவை முறை வருங்காலத்தில் திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளதாக அகில இந்திய வணிகர்கள் சங்க செயலாளர் பிரவீன் கண்டேல்வல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மின்னணு பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக டிஜிட்டல் ரதத்தை தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’இந்தியாவிலுள்ள 80 கோடி ஏடிஎம் கார்டுகளில் 95 சதவிகிதம் ரொக்கப்பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதம் 5% மட்டுமே மின்னணு பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார். வங்கிகள், டெபிட் கார்டுக்கு ஒரு சதவிகிதமும் கிரெடிட் கார்டுக்கு 2 சதவிகிதமும் சேவை கட்டணமாக பெற்று வருகிறது. மத்திய அரசின் மானியம் மூலம் அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.
புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க, அரசு 25 ஆயிரம் கோடியை செலவழித்துள்ளதாகவும் மேலும் 6 ஆயிரம் கோடியை அதன் பாதுகாப்பு அம்சங்களுக்காக செலவழித்ததாகவும் அவர் தெரிவித்தார்.