ஜொமேட்டோ எக்ஸ் தளம்
உலகம்

600 பணியாளர்களை நீக்கிய ஜொமேட்டோ.. ஏஐ தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த முடிவு!

ஜொமேட்டோ நிறுவனம் 600 பணியாளர்களை நீக்கியுள்ளது.

Prakash J

வீடு மற்றும் அலுவலகங்களுக்கே டெலிவரி செய்யப்படும் ஆன்லைன் உணவு, நாளுக்குநாள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் பல நிறுவனங்களும் இத்துறையில் கால் பதித்து வருவதுடன் போட்டிபோட்டி வியாபாரத்தைப் பெருக்கி வருகின்றன. அதில் ஜொமேட்டோ (zomato) நிறுவனமும் ஒன்று. சமீபத்தில்கூட, இந்த நிறுவனம் அதன் பெயரை ’Eternal’ என மாற்றியிருந்தது. மேலும் புதிய லோகோவையும் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜொமேட்டோ நிறுவனம் 600 பணியாளர்களை நீக்கியுள்ளது. இந்த 600 பேரும் நுகர்வோர் கூறும் புகார்களுக்கு தீர்வு தரும் பிரிவில் இருந்தவர்கள் ஆவர். இப்பிரிவில் வரும் புகார்களை NUGGET என்ற ஏஐ செயலி மூலம் ஜொமேட்டோ நிறுவனம் கையாளத்தொடங்கியுள்ளது. இச்செயலி மூலம் வாடிக்கையாளர்களின் 80 சதவீத புகார்களுக்கு தீர்வு காண முடிவதாக ஜொமேட்டோ கூறியுள்ளது. இதன் காரணமாகவே அப்பிரிவில் இருந்த 600 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஜொமேட்டா நிறுவனம் செலவுகளை குறைப்பதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

zomato

தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ’ஃபுடிபே’ என்ற வலைத்தளம், பின்னர் ’ஜொமேட்டோ’ எனப் பெயர் மாறியது. 2010ஆம் ஆண்டு இந்தப் பெயர் மாற்றப்பட்டதன் மூலம் டெல்லியைத் தாண்டி அந்த நிறுவனம் வளர்ச்சி பெற்றது. மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கு அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன.

2012ஆம் ஆண்டு ஜொமேட்டோ இந்தியாவில் 11க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது கிளைகளை விரிவுபடுத்தியது. 2015ஆம் ஆண்டில் உணவு விநியோக வணிகத்தில் ஜொமேட்டோவின் நுழைவு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது, பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. 2012ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் நுழைந்ததைத் தொடர்ந்து, ஜொமேட்டாவின் உலகளாவிய விரிவாக்கம் மேலும் வளர்ச்சி பெற்றது. ஜொமேட்டோ அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட 24க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் கிளைகளை விரிவுபடுத்தி உள்ளது.