பெயரை மாற்றிய ஜொமேட்டோ.. ஒப்புதல் அளித்த நிறுவனம்!
வீடு மற்றும் அலுவலகங்களுக்கே டெலிவரி செய்யப்படும் ஆன்லைன் உணவு, நாளுக்குநாள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் பல நிறுவனங்களும் இத்துறையில் கால் பதித்து வருவதுடன் போட்டிபோட்டி வியாபாரத்தைப் பெருக்கி வருகின்றன. அதில் ஜொமேட்டோ (zomato) நிறுவனமும் ஒன்று. தற்போது, இந்த நிறுவனம் அதன் பெயரை மாற்றியுள்ளது. ’Eternal’ என மறுபெயரிடுவதாகவும், புதிய லோகோவை வெளியிட்டதாகவும் அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபிந்தர் கோயல் தலைமையிலான இந்த நிறுவனம் புதிய பெயரை உள்நாட்டில் பயன்படுத்தத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களும் இந்த மாற்றத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என நிறுவனத் தலைவர் தீபிந்தர் கோயல் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “இது அங்கீகரிக்கப்பட்டால், எங்கள் நிறுவன வலைத்தளம் zomato.comவிலிருந்து eternal.comக்கு மாறும். எங்கள் பங்கு டிக்கரை ZOMATO இலிருந்து ETERNAL ஆக மாற்றுவோம். Eternal நான்கு முக்கிய வணிகங்களை உள்ளடக்கியது (தற்போது) - Zomato, Blinkit, District மற்றும் Hyperpure” என அதில் தெரிவித்துள்ளார்.
தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தா ஆகியோரால் உருவாக்கப்பட்ட ’ஃபுடிபே’ என்ற வலைத்தளம், பின்னர் ’ஜொமேட்டோ’ எனப் பெயர் மாறியது. 2010ஆம் ஆண்டு இந்தப் பெயர் மாற்றப்பட்டதன் மூலம் டெல்லியைத் தாண்டி அந்த நிறுவனம் வளர்ச்சி பெற்றது. மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கு அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. 2012ஆம் ஆண்டு ஜொமேட்டோ இந்தியாவில் 11க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது கிளைகளை விரிவுபடுத்தியது.
2015ஆம் ஆண்டில் உணவு விநியோக வணிகத்தில் ஜொமேட்டோவின் நுழைவு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது, பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. 2012ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் நுழைந்ததைத் தொடர்ந்து, ஜொமேட்டாவின் உலகளாவிய விரிவாக்கம் மேலும் வளர்ச்சி பெற்றது. ஜொமேட்டோ அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட 24க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் கிளைகளை விரிவுபடுத்தி உள்ளது.