Zohran Mamdani pt web
உலகம்

நியூயார்க் மேயர் தேர்தல் | இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி வெற்றி

நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார்.

PT WEB

நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார். சலாம் பாம்பே, தி நேம்சேக் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மீரா நாயரின் மகனான மம்தானி, நியூயார்க் நகரின் இளம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான அவர் , முதல் இஸ்லாமிய மேயர், முதல் ஆசியர், முதல் இந்திய வம்சாவளி மேயர் உள்ளிட்ட பெருமைகளைப் பெற்றுள்ளார்.

நியூயார்க் மேயர் தேர்தலில், முன்னாள் மேயர் ஆன்ட்ரூ குவோமோவை, மம்தானி தோற்கடித்தார். குறிப்பாக குவோமோ 36.3% வாக்குகளைப் பெற்ற நிலையில், மம்தானி 43.5% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். வெற்றி குறித்துப் பேசியிருக்கும் மம்தானி, “ஒரு செயல் செய்து முடிக்கப்படும் வரை அது செய்ய முடியாதது போலத்தான் தோன்றும்” என நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியை மேற்கோள்காட்டி பேசியிருக்கிறார்.  

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பிறந்த மம்தானி தனது ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். மம்தானின் வெற்றி, ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு அணியின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. நியூயார்க் மேயர் தேர்தலில் இடதுசாரி கொள்கைகளை கொண்ட மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க்கிற்கு அரசு நிதி வழங்காது என அதிபர் டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.