Zelensky and Putin  X
உலகம்

ஈரானுக்கு உதவுகிறதா ரஷ்யா.? உக்ரைன் அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

Premkumar S

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மோதல்கள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 17-ம் தேதி ஜெனிவாவில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. எனினும், ஹார்முஸ் வழியாக சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஜூலை 7-ம் தேதி அமெரிக்க ராணுவம் ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியதையடுத்து, அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஈரான் - அமெரிக்கா

இந்தச் சூழலில் தான், இருநாடுகளுக்கு இடையேயான மோதல்கள் தீவிர மடைந்திருக்கின்றன. குறிப்பாக, ஈரானின் அணு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்தும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்யா தனது செயற்கைக்கோள் கண்காணிப்பு தகவல்களை ஈரானுடன் பகிர்ந்து வருவதாகவும், அந்த தகவல்களின் உதவியால் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெலன்ஸ்கி

மேலும், பஹ்ரைன், ஜோர்டான், குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தொடர்பான கண்காணிப்பு தகவல்கள் ரஷ்யா மூலம் ஈரானுக்கு சென்றிருக்கலாம் என்றும், இது ரஷ்யா - ஈரான் ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்று வருவதற்கான அறிகுறி என்றும் கூறியுள்ளார்.

இதனுடன், காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையே ராணுவப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படும் கப்பல்களை உக்ரைன் தாக்கியிருப்பதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள், ரஷ்யா–ஈரான் ராணுவ இணைப்பை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கியுள்ளார்.

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு எதிராக சீனாவையும் ரஷ்யாவையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த ஒரு நாள் கழித்து ஜெலென்ஸ்கியின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.